Home அரசியல் ஹிண்ட்ராப் – மக்கள் கூட்டணி அரசியல் உடன்பாடு முறிவு?

ஹிண்ட்ராப் – மக்கள் கூட்டணி அரசியல் உடன்பாடு முறிவு?

713
0
SHARE
Ad

Hindraf-Waytha-logo-Feature

பிப்ரவரி 13 – இந்து உரிமை நடவடிக்கைக் குழுவான ஹிண்ட்ராப்பிற்கும் பக்காத்தான் எனப்படும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மக்கள் கூட்டணிக்கும் இடையிலான உடன்பாடு முறிவு காண்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.

ஹிண்ட்ராப் முன்வைத்துள்ள மலேசிய இந்தியர்களின் நலன்களுக்கான ஐந்தாண்டு திட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு மக்கள் கூட்டணி காட்டி வரும் தாமதமும், அக்கறையின்மையும்தான் இந்த முறிவுக்கு காரணமாகும். இதனால் இந்த இரண்டு அமைப்புக்களுக்கும் இடையிலான அரசியல் உடன்பாடு ஒன்றைக் காண முடியவில்லை என்பதோடு, பொதுத் தேர்தலில் இந்த இரண்டு அமைப்புக்களும் இணைந்து பணியாற்றும் சாத்தியமும் இருப்பதாக தோன்றவில்லை.

#TamilSchoolmychoice

இதுகுறித்து மலேசியகினி இணையத் தளத்திடம் கருத்துரைத்த ஹிண்ட்ராப்பின் தேசிய செயலாளர் பி.ரமேஷ், ஹிண்ட்ராப் மற்றும் மக்கள் கூட்டணி தலைவர்களிடையே பல முறை பேச்சுவார்த்தைகள் நடந்திருப்பதாகவும், மக்கள் கூட்டணி தலைவர் அன்வார் இப்ராகிமுடனும் பேச்சு வார்த்தை நடந்திருப்பதாகவும் ஆனால் இந்த பேச்சு வார்த்தைகள் மீது எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து மக்கள் கூட்டணியை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஹிண்ட்ராப் ஆதரிக்காது என்று ஹிண்ட்ராப் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தங்களின் ஐந்தாண்டு செயல்திட்ட வரைவினை ஏற்றுக் கொள்ளாத வரையில் மக்கள் கூட்டணியுடன் அரசியல் உடன்பாடு வைத்துக் கொள்ள முடியாது என்று ஹிண்ட்ராப் பல முறை ஏற்கனவே தெரிவித்துள்ளது.

அந்த ஐந்தாண்டு திட்ட வரைவு ஏழை இந்திய சமுதாயத்தை நாட்டு மேம்பாட்டுடன் இணைப்பதற்கான செயல்திட்டம் என்றும், அந்த திட்டம் சரித்திரபூர்வமாகவும், பொருளாதார ரீதியாகவும் நியாயமானது என்றும் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் மக்கள் கூட்டணி தொடர்ந்து மௌனம் சாதித்து வருவதாலும் தாமதம் காட்டி வருவதாலும் நாங்கள் அக்கறை கொள்ள வேண்டியிருக்கின்றது என்றும் ரமேஷ் கூறியுள்ளார்.

இதனால் அப்படியே ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், இந்திய சமுதாயத்திற்கு பிரதானமாக எந்தவித சலுகைகளும் கிடைக்காது என்பதை இதுவரை புறக்கணிக்கப்பட்டு வந்துள்ள ஏழை இந்திய சமுதாயத்திற்கு ஆலோசனையாக  கூற வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம் என்றும் ரமேஷ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் ஹிண்ட்ராப் இயக்கம் சட்டபூர்வமானது என்ற முடிவை தேசிய முன்னணி அரசாங்கம் எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதனைத் தொடர்ந்து ஹிண்ட்ராப்பிற்கும் தேசிய முன்னணி தலைவரும் பிரதமருமான நஜிப்பிற்கும் இடையில் பேச்சு வார்த்தை நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.