பெஷாவர், பிப். 12– பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள பெஷாவரில் ‘ஷாமா சினிமா’ என்ற பெயரில் திரையரங்கு உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் அந்த திரையரங்கில் ஏராளமானவர்கள் படம் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த திரையரங்கு மீது அடுத்தடுத்து 3 கையெறி குண்டுகள் வீசப்பட்டன.
இதனால் திரையரங்கு இடிந்தது. அங்கு புகையும், தூசியுமா இருந்தது. தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவத்தில் 12 பேர் பலியாகினர். 17 பேர் காயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் உள்பட வேறு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த திரையரங்கு அவாமி தேசிய கட்சியின் முன்னணி தலைவர்களின் குடும்பத்தினருக்கு சொந்தமானது.
இங்கு இந்தி படங்கள் ஒளிபரப்படுவதால் தீவிரவாதிகள் அடிக்கடி மிரட்டல் விடுத்து வந்தனர். எனவே தியேட்டர் வாசலில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தும்படி காவல்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் திரையரங்கு நிர்வாகிகள் அதை கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் குண்டு வீச்சு சம்பவத்துக்கு இந்தி திரைப்படம் மட்டும் காரணமல்ல. அங்கு ஆபாச படம் காட்டப்பட்டது என்று கூறப்படுகின்றது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏதோ ஒரு தீவிரவாத குழு குண்டு வீச்சு நடத்தியுள்ளது என காவதுறையினர் தெரிவித்துள்ளனர்.