கோலாலம்பூர், பிப்ரவரி 13 – தலைநகர் கோலாலம்பூர் சென்ட்ரலில் இயங்கி வரும் விமானப் பயணிகளுக்கான முகப்பில்(check-in counter) ஒவ்வொரு விமான நிறுவனங்களாக தங்களின் பிரத்தியேக முகப்புகளை நிர்மாணித்து வருகின்றன.
அந்த வகையில் ஏற்கனவே, அங்கு தனது பயணிகளுக்கான முகப்பைத் திறந்து சேவையாற்றி வரும் மத்திய கிழக்கு விமான நிறுவனமான எத்திஹாட் ஏர் வேஸ் தற்போது தனது இரண்டாவது பயணிகள் முகப்பை கோலாலம்பூர் சென்ட்ரல் வளாகத்தில் திறந்துள்ளது.
சென்ட்ரல் பயணிகள் முகப்பு மூலமாக தங்களின் பயணச் சீட்டுகளை உறுதிப்படுத்திக் கொண்டு அங்கிருந்து அநேகமாக இஆர்எல் (ERL) எனப்படும் விமான நிலையத்துக்கான நேரடி இரயில் மூலமாக பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
எத்திஹாட் விமான நிறுவன பயணிகளும் இந்த வசதியைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகின்ற காரணத்தால், இரண்டாவது முகப்பொன்றை திறக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு ஏற்பட்டதாக அந்த விமான நிறுவனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
எத்திஹாட் பயணிகள் தங்களின் விமானம் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பாக கோலாலம்பூர் சென்ட்ரலில் உள்ள பயணிகள் முகப்பில் தங்களின் பயணப் பெட்டிகளை சேர்ப்பித்து பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
அதன் பின்னர் அவர்கள் தங்களின் கைப்பெட்டிகளுடன் எவ்வித சிரமங்களுமின்றி இரயில் மூலமாக கோலாலம்பூர் விமான நிலையம் சென்று அங்கிருந்து நேரடியாக குடிநுழைவு (Immigration) பகுதிகளுக்கு சென்று தங்களின் பயணத்தைப் பிரச்சனைகளின்றி தொடர முடியும்.
கோலாலம்பூர் சென்ட்ரலில் உள்ள எத்திஹாட் விமான நிறுவனத்தின் பயணிகள் முகப்பு மாலை 3.25 முதல் மாலை 6.25 வரையிலும் பின்னர் இரவு 10 மணி முதல் இரவு 11.30 மணி வரையிலும், ஒரு நாளைக்கு இரு வேளைகளில் திறந்திருக்கும்.