கூச்சிங், பிப்ரவரி 12 – நீண்ட கால ஆரூடங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ அப்துல் தாயிப் மாமுட் எதிர்வரும் பிப்ரவரி 28ஆம் தேதி தனது பதவியைத் துறப்பார். அந்த முடிவை அவர் இன்று அறிவித்தார்.
அவருக்குப் பதிலாக சரவாக் முதல்வராக பார்ட்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவரும், சரவாக் மாநில அமைச்சரவையில் சிறப்பு விவகாரங்களுக்கான அமைச்சருமான டான்ஸ்ரீ அட்னான் சாத்திம் பதவியேற்பார்.
இன்று கூச்சிங்கில் சரவாக் மாநில ஆளுநர் துன் அபாங் முகமட் சாலாஹூடினைச் சந்தித்த பின்னர் தனது ராஜினாமா முடிவை தாயிப் அறிவித்தார்.
அம்னோ தலைமைத்துவம் துன் அபாங் ஜொஹாரிதான் அடுத்த முதல்வராக வரவேண்டும் என விரும்பயதாகத் தெரிகின்றது. இருப்பினும், தாயிப் தனது தேர்வாக அட்னான் சாத்திமைத் தேர்ந்தெடுத்துள்ளார். சாத்திம், தாயிப்புக்கு நெருக்கமானவர் என்பதோடு தாயிப்பின் தங்கையின் முன்னாள் கணவர்தான் சாத்திம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய முதல்வரின் பதவியேற்பு வைபவமும் பிப்ரவரி 28ஆம் தேதியே நடைபெறும்.
அடுத்த சரவாக் மாநில ஆளுநராக தாயிப் பதவியேற்பார் என்ற நிலையில் சரவாக் மாநிலத்தில் தாயிப்பின் பிடியும் ஆதிக்கமும் இன்னும் தொடரும் என்பதில் ஐயமில்லை.
எதிர்வரும் 2016ஆம் ஆண்டிற்குள் நடைபெறவிருக்குல் சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் சரவாக் மாநில தேசிய முன்னணியை முன்னின்று தலைமையேற்று நடத்தும் மாபெரும் பொறுப்பு இப்போது சாத்திமின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.