துபாய், மே 10 – எகிப்து நாட்டிலிருந்து ஐக்கிய அரபு நாட்டை (யுனைடெட் அராப் எமிரெட்ஸ்) நோக்கிச் சென்று கொண்டிருந்த எத்திஹாட் ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று பாதுகாப்பு காரணங்களுக்காக துபாய் நகரிலுள்ள விமான தளம் ஒன்றை நோக்கி இன்று திருப்பி விடப்பட்டது.
கடந்த ஒரு வாரத்தில் இது போன்ற இரண்டாவது சம்பவம் இதுவென எத்திஹாட் விமான நிறுவனம் அறிவித்திருக்கின்றது.
எத்திஹாட் விமானம் ஒன்றின் மாதிரி படம்
ஆனால் அந்த பாதுகாப்பு காரணங்கள் என்னவென்று தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், சவுதி அரேபியாவின் அல்-அராபியா தொலைக்காட்சி அலைவரிசை வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமானம் திருப்பிவிடப்பட்டதாக அறிவித்தது.
எகிப்து தலைநகர் கெய்ரோவிலிருந்து புறப்பட்டு, அபு தாபி நோக்கி சென்று கொண்டிருந்த எத்திஹாட் விமான நிறுவனத்தின் ஏர்பஸ் A321 விமானம் துபாயிலுள்ள அல் மின்ஹாட் விமானத் தளத்திற்கு திருப்பிவிடப்பட்டது என ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
விமானத்தில் இருக்கும் 128 பயணிகளும் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், துபாயிலிருந்து அபு தாபிக்கு பேருந்துகள் மூலம் அனுப்பப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில், குவைத் நகரிலிருந்து ஐக்கிய அரபு நகரான ஷார்ஜா நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் அரேபியா விமானம் ஒன்று – “இந்த விமானம் வெடித்துச் சிதறப் போகின்றது” எனப் பயணி ஒருவர் கூறியதைத் தொடர்ந்து, இதே போன்று அல் மின்ஹாட் விமானத் தளத்திற்கு திருப்பி விடப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஆனாலும் அந்த பயணி சொன்ன தகவல் வெறும் பொய் என்பது பின்னர் தெரிய வந்தது.