கோலாலம்பூர், பிப் 18 – துணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்து ஒரு வாரத்திற்குப் பிறகு இன்று செய்தியாளர்களை சந்தித்த பி.வேதமூர்த்தி, பிரதமர் நஜிப் துன் ரசாக்கை இந்திய சமுதாயத்திற்கு துரோகம் செய்தவர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், துரோகத்திற்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் வேதமூர்த்தி கூறியுள்ளார்.
“பிரதமர் நஜிப் இந்திய சமுதாயத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்து, வரலாற்றில் மறக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். எதிர்கால சந்ததியினர் இந்த துரோகத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்” என்றும் வேதமூர்த்தி ஆத்திரத்துடன் குறிப்பிட்டார்.
கடந்த 8 மாதங்களில் மட்டும், தான் 16 முறை பிரதமரை அவரது புத்ராஜெயா அலுவலகத்தில் சந்தித்ததாகவும், ஒவ்வொரு முறையும் பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் படி கூறியதாகவும் வேதமூர்த்தி விளக்கமளித்தார்.
மேலும், அரசியலிலும், அரசாங்கப் பணியாளர்களை வேலை வாங்குவதிலும் பிரதமர் நஜிப் மிகவும் பலவீனமான மனிதராக இருப்பதாகவும் வேதமூர்த்தி விமர்சித்துள்ளார்.
பொதுமக்கள் முன்னிலையில், இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவுவதாக பல வாக்குறுதிகளை அளித்துவிட்டு, பின்னர் துரோகம் செய்த இந்த தலைவரைக் கண்டு தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகள் வெட்கப்பட வேண்டும் என்று வேதமூர்த்தி காட்டமாகக் கூறியுள்ளார்.