கோலாலம்பூர், பிப் 19 – அண்டை நாடுகளின் அரசியல் தலைவர்கள் மலேசியாவில் வந்து தங்களது அரசியல் கூட்டங்களை நடத்துவதை காவல்துறை எச்சரிக்கையுடன் கவனித்து வருவதாக தேசிய காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.
இது போன்ற அரசியல் கூட்டங்களால் அவர்களின் சொந்த நாடுகளிலுள்ள பிரச்சனைகளால் ஏற்படும் மோதல்கள் மலேசியாவில் நிகழ்ந்து விடக்கூடாது என்றும் காலிட் குறிப்பிட்டார்.
நேற்று புக்கிட் அம்மானில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், “இது போன்ற அரசியல் கூட்டங்களுக்கு நாம் அனுமதி அளிப்பதில்லை. அதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கின்றோம். எனினும் இது ஒரு சுதந்திர நாடு. முறையான பயண பத்திரங்கள் வைத்திருப்பவர்கள் மலேசியாவிற்குள் வருவதையும் தடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.
கடந்த வாரம் ராக்கின் தேசிய வளர்ச்சி கட்சித் தலைவர் டாக்டர் ஆயே முவாங் உட்பட மியான்மர் நாட்டைச் சேர்ந்த இரு அரசியல் தலைவர்களை கொல்ல முயற்சி நடந்ததை காலிட் சுட்டிக்காட்டினார்.
மியான்மர் யாங்கோனில் இஸ்லாமியர்களுக்கும், புத்த சமயத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனையை விசாரணை செய்யும் இந்த அரசியல் தலைவர்களின் மேல் அதிருப்தியடைந்தவர்கள் தான் அவர்களை கொல்ல முயற்சித்துள்ளதாக கூறப்படுகின்றது.