Home நாடு டாக்டர் சுப்ராவுக்குப் பதிலாக புதிய சுகாதார அமைச்சர் லியோ தியோங் லாய்?

டாக்டர் சுப்ராவுக்குப் பதிலாக புதிய சுகாதார அமைச்சர் லியோ தியோங் லாய்?

576
0
SHARE
Ad

Dr.-S.-Subramaniamபிப்ரவரி 21 – எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெறும் மலேசிய சீனர் சங்கத்தின் (ம.சீ.ச) சிறப்பு பொதுப் பேரவையின் முடிவை நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. மீண்டும் அமைச்சரவையில் சேர்வதா இல்லையா என்ற முக்கிய முடிவை அந்த கட்சியின் பேராளர்கள் அன்று எடுக்கவிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

மசீச மீண்டும் அமைச்சரவைக்குள் நுழைய வேண்டும், அமைச்சர் பதவிகளையும், அரசாங்கப் பதவிகளையும் ஏற்க வேண்டும் என்பதுதான் நடப்பு மசீச தலைமைத்துவத்தின் முடிவாக இருப்பதால், பேராளர்களும் அந்த எண்ண ஓட்டத்தையே பிரதிபலித்து மீண்டும் அமைச்சரவைக்குள் மசீசவை இடம் பெறச் செய்யும் முடிவை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு முடிவு எடுக்கப்பட்டால், காஜாங் இடைத் தேர்தலுக்குப் பின்னரோ அல்லது அதற்கு முன்பாகவோ அமைச்சரவை மாற்றம் நிகழலாம்.

காஜாங் இடைத் தேர்தலுக்குப் பிறகுதான் அமைச்சரவை மாற்றம் என ஒரு சில அரசியல் பார்வையாளர்கள் கருதினாலும், காஜாங்கில் போட்டியிடப் போவது மசீச என்பதால், அந்தக் கட்சியைப் பலப்படுத்தும் வண்ணம், சீன வாக்காளர்களைக் கவரும் வண்ணம், இடைத் தேர்தலுக்கு முன்பாகவே, அமைச்சரவைக்கும் மசீசவின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய சுகாதார அமைச்சர் லியோ?

பாரம்பரியமாக போக்குவரத்து அமைச்சராகவும், சுகாதார அமைச்சராகவும் மசீச தலைவர்கள்தான் இடம் பெற்று வந்தார்கள். ஆனால், மசீச அமைச்சரவையில் இடம் பெறாததைத் தொடர்ந்து, ம.இ.காவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்  சுப்ரமணியம் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஒரு மருத்துவராகவும் இருப்பதாலும், முன்பு அரசாங்க சேவையில் இருந்தவர் என்பதாலும், இதுவரையில் சுகாதார அமைச்சை சுப்ரா, மிகத் திறம்பட வழி நடத்தி வருகின்றார் என்றும் பிரதமரின் ஆதரவையும், பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார் என்றும் பரவலாக கருதப்படுகின்றது.

இந்நிலையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மசீச அமைச்சரவைக்குள் நுழையும் முடிவை எடுக்கும் பட்சத்தில், புதிய சுகாதார அமைச்சராக மசீச தேசியத் தலைவர் லியோ தியோங் லாய் நியமிக்கப்படுவார் என்றும், போக்குவரத்து அமைச்சராக மசீச துணைத் தலைவர் வீ கா சியோங் நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

போக்குவரத்து அமைச்சருக்கான நியமனம் இன்னும் காலியாகவே இருக்கின்றது. இடைக்கால போக்குவரத்து அமைச்சராக தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் பணியாற்றி வருகின்றார்.

அமைச்சரவை மாற்றம், காஜாங் இடைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறுமா அல்லது இடைத் தேர்தலுக்குப் பின்பு நடைபெறுமா என்ற கேள்வி ஒரு புறமிருக்க, டாக்டர் சுப்ரா சுகாதார அமைச்சராக தொடர்ந்து நீடிப்பாரா அல்லது வேறு ஒரு புதிய அமைச்சுக்கு மாற்றப்படுவாரா என்பதுதான் தற்போது, தேசிய முன்னணி மற்றும் ம.இ.கா வட்டாரங்களில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வரும் கேள்வியாகும்.