சென்னை, பிப் 21-மதுரவாயல் -துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்துக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் ஆணை ஜெயலலிதாவுக்கு பெரிய அவமானம் என்றே சொல்லலாம் என கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டியில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை ஆவதை உச்ச நீதிமன்றம் தடை செய்திருக்கிறதே? தமிழக அரசு சட்டப்படி உரிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்று உச்ச நீதிமன்றமே கூறியிருக்கிறதே?
நான் சொல்கிற ஒரே பதில், “முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்பவர், திறப்பா டிலாஅ தவர்’’ (முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள் கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமை ஆகாமல் முடங்கித்தான் போகும்) என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாகத்தான் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருடைய விடுதலைப் பிரச்னையில் ஜெயலலிதா தலைமையிலே உள்ள அரசு நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால் அந்த அம்மையாருடைய அறிக்கையில் தேவையில்லாமல் திமுகவை பிறாண்டியிருக்கிறார்.
நான் அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். உங்களுக்கும் சொல்லுகின்றேன்.
நளினி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பரோலில் செல்ல அனுமதி கேட்டு இந்த சர்க்காருக்கு விண்ணப்பித்தபோது, அதை ஏற்க மறுத்து, முடியாது என்று பதில் கூறிவிட்டவர்தான் ஜெயலலிதா என்பதை யாரும் மறந்துவிட கூடாது.
திமுகவும், அதிமுகவும் இந்திய இறையாண்மையை சூறையாடுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியிருக்கிறாரே? ஞானதேசிகனைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு நான் ஒன்றும் அவ்வளவு பெரியவனல்ல.
மதுரவாயல் -துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறதே? திமுக ஆட்சியும் மத்திய அரசும் கலந்து ஆரம்பிக்கப்பட்ட திட்டம் மதுரவாயல் திட்டம்.
அந்தத் திட்டத்தை பொறாமையின் காரணமாகவோ அல்லது வழக்கமான அதிமுகவின் குறிப்பாக ஜெயலலிதாவின் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவோ அதை நிறைவேற்றாமலே தள்ளிப் போட்டு விட்டார்.
அது சம்பந்தமாக அரசின் பல செயலாளர்கள், பல விஞ்ஞானிகள், கட்டுமானப் பொறியாளர்கள் ஆகியோர் எடுத்துச் சொல்லியும் கூட ஜெயலலிதா அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இன்றைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் இந்த ஆணை ஜெயலலிதாவுக்கு பெரிய மூக்கறுப்பு என்று சொல்லலாம்.
வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டணி பற்றி முடிவு செய்துவிட்டீர்களா?நேர்காணல் நடக்கும்போதே கூட்டணி பற்றி முடிவு செய்வதை எங்கேயாவது பத்திரிகை உலக வரலாற்றில் கண்டிருக்கிறீர்களா? என கருணாநிதி பதில் அளித்தார்.