Home நாடு புதுப்பொலிவுடன் மின்னல் பண்பலையின் காலைக்கதிர்!

புதுப்பொலிவுடன் மின்னல் பண்பலையின் காலைக்கதிர்!

711
0
SHARE
Ad

IMG_1130கோலாலம்பூர், பிப் 27 – அரசாங்க வானொலியான மின்னல் பண்பலையின் காலைக்கதிர் நிகழ்ச்சி வரும் மார்ச் மாதம் தொடங்கி புதுப்பொலிவு காணவிருக்கிறது.

இது தவிர, மலிண்டோ ஏர் மற்றும் மலேசிய சுற்றுலாத்துறையுடன் இணைந்து ‘சுத்தி – சுத்தி மின்னல் எப்.எம்’ என்ற நிகழ்ச்சியின் வாயிலாக, வரும் மார்ச் 7 ஆம் தேதி, 3 நாட்கள் லங்காவி சுற்றுலாவையும் ஏற்பாடு செய்துள்ளது.

இனிமையான பேச்சாற்றலும், துடிப்பும் கொண்ட இளைஞர்களை தன்னகத்தே கொண்டுள்ள மின்னல் பண்பலையில், இதுவரை வழங்கி வந்த காலைக்கதிர் நிகழ்ச்சியில், இனி அதன் பாணி மாறாமல், அதே நேரத்தில் அனைவரையும் கவரும் வகையில் நிகழ்ச்சிகள் படைக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை அங்கசாபூரியிலுள்ள விஸ்மா டிவி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வானொலி நிகழ்ச்சிகள் பிரிவின் இயக்குநர் நவியா ரீட்டா சீலா, மலிண்டோ ஏர் நிறுவனத்தின் பிரதிநிதி சுரேஸ்வாணன், மின்னல் பண்பலை நிர்வாகி எஸ்.குமரன், நிர்மலா சரவணன், சுமதி மற்றும் மின்னல் பண்பலை அறிவிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய எஸ்.குமரன், அன்பர்கள் தினத்தன்று திருமணமான தம்பதிகள், தங்களின் சுவாரஸ்யமான கதைகளை அனுப்பி வைக்கும் சிறப்பு போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தம்பதிகளை, எதிர்வரும் மார்ச் 7 ஆம் தேதி, மின்னல் பண்பலை லங்காவிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்போவதாக அறிவித்தார்.RTM

மேலும், மலிண்டோ ஏர் நிறுவனம் மற்றும் லங்காவி நகர வளர்ச்சி ஆணையத்துடன் இணைந்து  இப்படி ஒரு பயணத்தை ஏற்பாடு செய்வது இது இரண்டாவது முறையாகும் என்றும் தெரிவித்தார்.

மின்னல் பண்பலையின் நிகழ்ச்சிகள் மற்றும் அறிவிப்புகள் அனைத்தையும், அதன் அகப்பக்கத்திலும், செல்பேசிகளில் செயலி வடிவிலும் தெரிந்து கொள்ளும் வகையில் தொழில்நுட்ப மேம்பாடுகள் நடந்து வருவதாகவும் குமரன் குறிப்பிட்டார்.

திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 6.30 மணி தொடங்கி 10 வரை ஒலியேற்றப்படும் இந்த காலைக்கதிர் நிகழ்ச்சியில் அரசாங்க தகவல்களையும், உலகத் தகவல்களையும் தங்கள் குழுவினர் மிகச் சிறப்பாக வழங்கி வருவதாகவும் குமரன் தெரிவித்தார்.

திங்கள் முதல் வெள்ளி வரை தெய்வீகன், ஹரி மற்றும் புவனா ஆகியோர் காலைக்கதிர் தொகுப்பை தொகுத்து வழங்குவார்கள் என்றும், சனி, ஞாயிறுகளில் சத்யா மற்றும் ரவீன் ஆகிய இருவரும் அறிவிப்பாளர்களாக அமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

IMG_1119அத்துடன் புதிய போட்டி நிகழ்ச்சிகளின் வாயிலாக நேயர்கள், வாரம் 3000 ரிங்கிட் வரை பரிசுகளைத் தட்டிச் செல்லும் வாய்ப்பும் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பேசிய மின்னல் அறிவிப்பாளர்களான தெய்வீகன், புவனா, ரவீன், சத்யா, ஹரி ஆகிய அனைவரும் மின்னல் பண்பலையின் நிகழ்ச்சிகளை மேலும் சிறப்பாக வழங்குவோம் என்று தெரிவித்தனர்.

– பீனிக்ஸ்தாசன்