சென்னை, பிப் 28 – சத்தியமூர்த்திபவனில் தாக்குதல் நடத்திய இயக்கங்களை தமிழகத்தில் தடை செய்ய கோரி கவர்னரிடம் மனு கொடுக்க உள்ளதாக ஞானதேசிகன் கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களிடம் கூறியது, தமிழர் முன்னேற்ற படை இயக்கம் என்ற போர்வையில் சத்தியமூர்த்திபவனில் சில சமூக விரோதிகள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தியது கண்டிக்கதக்கது.
நியாயமான ஆர்ப்பாட்டத்தை கூட குறிப்பிட்ட இடத்தில்தான் செய்ய வேண்டும் என வற்புறுத்தும் காவல்துறையினர், அவர்களை சத்தியமூர்த்திபவன் வாயில் வரை அனுமதித்தது ஏன்.
காமராஜர் பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொள்வதால், கட்சியினர் எல்லோரும் அங்கு சென்றிருப்பார்கள் என திட்டமிட்டே தாக்குதல் நடத்தியுள்ளனர். வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல ராஜிவ் சிலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த சமூக விரோத செயல்களை தொடர்ந்து யார் செய்து வருகிறார்கள் என்று காவல்துறைக்கு தெரியும். தமிழக முன்னேற்ற படையில் பெரிய குற்றவாளிகள் உள்ளனர் என்ற தகவலும் எங்களுக்கு கிடைத்துள்ளது.
இதுபோன்ற இயக்கங்களை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும். இதுதொடர்பாக கவர்னரிடம் மனு கொடுக்க உள்ளோம். விடுதலை புலிகளுக்கு மட்டுமே சலுகைகள் வாங்கும் அரசாக தமிழக அரசு இருக்க கூடாது. சமூக விரோதிகளை அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். அது அரசுக்கு நல்லதல்ல. நாகரீகமற்ற இதுபோன்ற செயல்களை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டிக்க வேண்டும் என ஞானதேசிகன் கூறினார்.