கோலாலம்பூர், பிப் 28 – எதிர்கட்சித் தலைவர் அன்வாரை இப்ராகிமை அவமானப்படுத்தியதாக அம்னோ சார்பு வலைப்பதிவர் வான் முகமட் அஸ்ரி வான் டெரிஸ் (பபகொமோ) மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நேற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது.
அன்வாருக்கு ஏற்பட்ட இந்த சேதத்திற்கு, வான் முகமட் அஸ்ரி 800,000 ரிங்கிட் அபராதம் கட்ட வேண்டும் என்றும் நீதித்துறை ஆணையர் ரோஸிலா யோப் தீர்ப்பு வழங்கினார்.
அதே நேரத்தில் வழக்கு செலவுகளுக்காக 50,000 ரிங்கிட்டும் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார் என்று அன்வார் சார்பாக அவரது பிரதிநிதியான பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் தெரிவித்தார்.
தன் மீது சாட்டப்பட்ட குற்றம் குறித்து வான் முகமட் அஸ்ரி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றார்.
“அந்த படத்தில் இருப்பது எப்படி அன்வார் இல்லையோ, அதே போல் பபகொமோ என்று கூறப்படும் நபர் நான் இல்லை” என்று தெரிவித்தார்.
அன்வார் இப்ராகிம் போன்ற தோற்றமளிக்கும் ஒருவர், அடையாளம் தெரியாத பெண் ஒருவருடன் தகாத முறையில் உறவு கொள்வது போன்ற புகைப்படங்களும், காணொளியும் ‘பபகொமோ’ என்ற அம்னோ சார்பு வலைத்தளத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதனால் அவ்வலைத்தளத்தின் உரிமையாளர் பபகொமோ மீது மார்ச் மாதம் 21 ஆம் தேதி, அன்வார் மானநஷ்ட வழக்கு பதிவு செய்து 100 மில்லியன் இழப்பீடு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.