மார்ச் 3 – ஆஸ்கார் விருதுகள் பரிசளிப்பு விழாவுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு சிறந்த படத்திற்கான போட்டியில் இடம் பெற்றிருக்கும் ‘தெ வோல்வ் ஆஃப் வால் ஸ்ட்ரீட்” (The Wolf of Wall Street) என்ற ஆங்கிலப்படத்தைத் தயாரித்தவர் ஒரு மலேசியர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
படத்தில் காணப்படும் அவரது பெயர் ரிசா அசிஸ் (Riza Aziz) என்பதாகும். அவர் வேறு யாருமல்ல, பிரதமரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோரின் முதல் கணவருக்குப் பிறந்த அவரது மகனாவார். இவர் தற்போது ரெட் கிரானைட் (Red Granite) என்ற நிறுவனத்தின் மூலம் பல மில்லியன் முதலீட்டில் ஹாலிவுட் படங்களைத் தயாரித்து வருகின்றார்.
“டைட்டானிக்” படத்தின் மூலம் இரசிகர்களைக் கவர்ந்து உலகப் புகழ் பெற்ற லியோர்னாடோ டி கேப்பிரோ என்ற பிரபல ஹாலிவுட் நடிகர் ரிசா அசிஸ் தயாரித்த “வோல்வ் ஆஃப் வால் ஸ்ட்ரீட் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கின்றார்.
ஏற்கனவே இயக்குநர் பிரிவில் ஆஸ்கார் விருது வென்றவரான மார்ட்டின் ஸ்கோர்சி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
சிறந்த படம் பிரிவில் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் பிரிவுகளிலும் போட்டியில் குதித்துள்ளது.
இந்தப் படம் இன்னும் மலேசியாவில் வெளியிடப்படவில்லை. ஏராளமான ஆபாசக் காட்சிகள் கொண்ட படம் என்பதால் மலேசிய தணிக்கைக் குழுவின் கடுமையான விதிகளைத் தாண்டி இந்தப் படம் மலேசியாவில் திரையிடப்படுவது சாத்தியமில்லை என சினிமா பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரிசா அசிஸ் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்றாலும் அவருக்கு ஆஸ்கார் விருதளிப்பு வைபவத்தில் கலந்து கொள்ள அழைப்பு வழங்கப்படவில்லை. ஆஸ்கார் விருதளிப்பு குழுவின் விதிமுறைகளுக்கேற்ப அவருக்கு தயாரிப்பாளர் அந்தஸ்து இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அது ஒரு சர்ச்சையாக தகவல் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்டது.
வோல்வ் ஆஃப் வால் ஸ்ட்ரீட் படத்துக்கு ஏதாவது ஒரு பிரிவில் விருதுகள் கிடைத்தால் மலேசியர் ஒருவர் தயாரித்து ஆஸ்கார் விருது பெறும் முதல் படமாக அது திகழும்.