பாட்னா, மார் 3 – பீகார் மாநிலத்துக்கு எதிரான மத்திய அரசின் பாரபட்சமான போக்குக்கு கண்டனம் தெரிவித்தும், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து உதவி அளிக்க வலியுறுத்தியும் பாட்னாவில் காந்தி மைதானத்தில் உள்ள காந்தி சிலை முன்பு முதல்வர் நிதிஷ்குமார் அமர்ந்து சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஒரு நாள் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. பாட்னாவிலுள்ள தனது இல்லத்தில் இருந்து காந்தி மைதானத்திற்கு அமைச்சர்கள், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் பாதயாத்திரையாக நிதிஷ்குமார் சென்றார். பின்னர், காந்தி சிலை அருகே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
சுமார் 5 மணி நேரம் அமர்ந்து சத்யாகிரகத்தில் ஈடுபட்ட நிதிஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரும் தங்களது சத்யாகிரத்திற்கு வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். முன்னேற்றப்பட வேண்டிய மாநிலங்களில் பீகாரும் ஒன்று.
மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரும் தங்களது முயற்சிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றார்.மூத்த அமைச்சர்கள் விஜய் சவுத்ரி, பி.கே. ஷாஹி, ஷியாம் ராஜக், நிதிஷ் மிஸ்ரா, என்.என். யாதவ், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிக அளவில் முதல்வருடன் தர்ணாவில் கலந்து கொண்டனர்.