சிலாங்கூர், மார்ச் 3 – தற்போதைக்கு காஜாங் இடைத்தேர்தல் மட்டுமே தனது ஒரே நோக்கம் என்று பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியுள்ளார்.
அதே நேரத்தில் பிகேஆர் தேர்தலில் போட்டியிட்டு தனது பதவியை தக்க வைத்துக் கொள்ளப் போகிறாரா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இது குறித்து நேற்று இரவு காஜாங்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் இன்னும் முடிவு செய்யவில்லை. தற்போதைக்கு காஜாங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றேன்” என்று கூறினார்.
கட்சியின் தேசிய தேர்தல் இயக்குநராக இருக்கும் தான், இந்த இடைத்தேர்தலை அமைதியாக நடத்த வேண்டியது அவசியம் என்றும் அஸ்மின் அலி தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை, சிலாங்கூர் மந்திரி பெசாரான காலிட் இப்ராகிம், தான் பிகேஆர் கட்சியின் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
எனினும், வரும் மார்ச் 23 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்குப் பின்னர் தான் கட்சித் தேர்தல் நடைபெறும் என்றும் காலிட் தெரிவித்தார்.
இது குறித்து கருத்துரைத்த அஸ்மின் அலி, கட்சியில் உறுப்பினராக உள்ள யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், தற்போது தன்னுடைய எண்ணம் முழுவதும் அன்வார் வெற்றியடைய வேண்டும் என்பது மட்டுமே என்று தெரிவித்தார்.