கோலாலம்பூர், மார்ச் 4 – நாட்டில் பல இடங்களில் கண்ணை மறைக்கும் அளவிற்கு பரவியுள்ள புகைமூட்டத்தோடு, புகைமூட்டமாக இயற்கைவளம் சுற்றுச்சூழல் அமைச்சரான டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலும் மாயமாய் மறைந்து விட்டிருக்கலாம் என்று கெப்போங் ம.இ.கா தொகுதி தலைவரான எஸ்.வேள்பாரி கூறியுள்ளார்.
புகைமூட்டம் பற்றியோ, அதனால் ஏற்படும் பாதிப்பு பற்றியோ அல்லது பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றியோ பழனிவேல் இதுவரை வாய் திறக்கவில்லை என்றும் வேள்பாரி குற்றம் சாட்டினார்.
“அவருக்கு மலேசியர்களின் உயிர் மீதோ அல்லது இந்நாட்டில் வாழும் உயிரினங்கள் மீதோ அக்கறை இல்லை. மாறாக சீனாவில் இருந்து இறக்குமதியாகவிருக்கும் பாண்டா கரடிகளைப் பாதுகாப்பதில் தான் அவரது முழு கவனமும் இருக்கிறது” என்று வேள்பாரி தெரிவித்தார்.
இயற்கைவளம் சுற்றுச்சூழல் அமைச்சராக நாட்டில் பரவியிருக்கும் புகைமூட்டம் குறித்தும், டெங்கி, H1N1 போன்ற காய்ச்சல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவரது பொறுப்பு. ஆனால் பழனிவேல் அதை பொருட்படுத்துவதில்லை என்றும் வேள்பாரி குறை கூறினார்.