காஜாங், மார்ச் 5 – தனது அரசியல் வாழ்க்கையை நீதித்துறையின் மூலம் முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று இரவு தாமான் ஸ்ரீ ஜெனாரிஸில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அன்வார், இந்த வார இறுதிக்குள் தனது ஓரினப்புணர்ச்சி வழக்கு முடிவுக்கு வந்து விடும் என்று தெரிவித்தார்.
“இந்த வார இறுதிக்குள் வழக்குகள் அனைத்திற்கும் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும் என்று என்னுடைய வழக்கறிஞர் கர்பால் சிங் கூறினார்” என்று அன்வார் தெரிவித்தார்.
ஓரினப்புணர்ச்சி வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது என்பதையும் அன்வார் சுட்டிக் காட்டினார்.
கடந்த வருடம் ஜனவரி மாதம், கோலாலம்பூர் உயர்நீதிமன்றம், அன்வார் இப்ராகிமின் முன்னாள் உதவியாளரான சைபுல் புக்காரி அஸ்லான் தொடுத்த ஓரினப்புணர்ச்சி வழக்கில் இருந்து அன்வாரை விடுவித்தது.
ஆனால், இந்த வழக்கில் தீர்ப்பை எதிர்த்து மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில், காஜாங் இடைத்தேர்தலில் போட்டியிடும் தனக்கு பல தடைகளை ஏற்படுத்தும் விதமாக தேர்தல் ஆணையமும் செயல்படுவதாக அன்வார் தெரிவித்தார்.
“வரும் மார்ச் 11 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல். அதே நாளில் நான் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராகவும் உரையாற்ற வேண்டும். அதே நாளில் எனது வழக்கறிஞர் கர்பால் சிங்கிற்கு எதிரான வழக்கில் தீர்ப்பும் வழங்கப்படவுள்ளது” என்று அன்வார் கூறினார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு பேராக் சுல்தான் அஸ்லான் ஷாவிற்கு எதிராக அவதூறு கூறினார் என்று ஜசெக தலைவர் மற்றும் வழக்கறிஞரான கர்பால் சிங் மீது கடந்த வாரம் குற்றம் நிரூபிக்கப்பட்டது.