சென்னை, மார் 6 – தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு, ‘ஜனநாயக முற்போக்கு கூட்டணி’ என, தி.மு.க. தலைவர் கருணாநிதி பெயர் சூட்டினார். நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவித்தவுடன், நேற்று சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடந்தது. நம் கூட்டணியை ‘ஜனநாயக முற்போக்கு கூட்டணி’ என, இனி அழைப்போம்.
கூட்டணியில் இடம் பெற்றவர்கள், முன்வைத்துள்ள கருத்துகளை ஆராய்ந்து அதன்படி நடவடிக்கை எடுப்பேன். மாவட்ட அளவிலும், நாங்கள் மதிக்கப்பட வேண்டும் என, ஒரு சில கருத்துகள் கூறப்பட்டன. மாவட்ட அளவில் மட்டுமல்ல, ஒன்றிய அளவில் கூட மதிக்கப்படுவதற்கான ஏற்பாடு செய்யப்படும்.
கூட்டணியில் உள்ளவர்களை, ஒரு சில இடங்களில் மதிக்காத சூழ்நிலை இருப்பது இங்கே சுட்டிக் காட்டப்பட்டது. அதை உணர்ந்ததோடு, அவர்கள் திருத்திக் கொள்ளவும் செய்திருக்கிறேன். இது தேர்தலுக்கு மட்டுமல்ல என்றும் தொடரும். எதிர்காலத்தில் தமிழகத்திலும், இந்தியாவிலும் நாம் ஆற்ற வேண்டிய பணிக்கு அச்சாரமான கூட்டம் இது என்ற உணர்வோடு இந்த அணியில் ஒத்துழைக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார்.