சிர்புர், மார் 6 – ‘’நான் பிரதமராவது முக்கிய விஷயம் அல்ல. இங்குள்ள அனைத்து இந்தியர்களும் இது தங்கள் நாடு என்பதை உணர வேண்டும் அதுதான் முக்கியம் என ராகுல் காந்தி பேசினார். மகாராஷ்டிராவில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சிர்புர் என்ற இடத்தில் பழங்குடியின இளைஞர்களிடம் கலந்துரையாடினார். அப்போது ஒரு இளைஞர் ராகுல் பிரதமராக வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது பேசிய ராகுல் ‘‘நான் பிரதமராவது ஒரு விஷயமே அல்ல. இங்குள்ள ஒவ்வொருவரும் முக்கியமாக பெண்களும், இளைஞர்களும் இது தங்கள் நாடு என்பதை உணர வேண்டும். இளைஞர்கள் அரசியலில் சேர வேண்டும். சொந்த நாட்டில் ஒருவர் கூட அஞ்சக்கூடாது. அடுத்த 10 ஆண்டுகளில் உங்களில் ஒருவர் எம்.எல்.ஏ., எம்.பி.யாக வேண்டும் என விரும்புகிறேன்.
ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் தன்னம்பிக்கை இல்லாததால் அவர் ஆவேசத்துடன் காணப்பட்டார். காந்திஜி எப்போதும் கோபம் அடைந்ததில்லை. அவர் அமைதியாக பேசியது அவருடைய தன்னம்பிக்கையை காட்டியது. உங்களைப் போல பழங்குடியின இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும். சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது. 50 -ஆண்டுகளுக்கு முன்னாள் ஒருவர் கூட பணக்காரரல்ல.
மகாராஜா மற்றும் ஆங்கிலேயர் மட்டுமே பணக்காரர்களாக உள்ளனர். தற்போது இந்தியாவில் பணக்காரர்கள் பலர் உள்ளனர். இந்தியா திறமைசாலிகள் மிகுந்த நாடு. அந்த திறமையையும், அடக்கத்தையும் நீங்கள் பயன்படுத்தவேண்டும். நீங்கள் யாருக்கும் தாழந்தவர் அல்ல. அதனால் தன்னம்பிக்கையுடன் இருங்கள். அவுரங்காபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், ‘‘நாங்கள் மக்களுக்கு அதிகாரம் அளிக்க விரும்புகிறோம். ஆனால் பா.ஜ.க ஒருவர் கையில் மட்டும் அதிகாரத்தை அளிக்க விரும்புகிறது என்றார் ராகுல் காந்தி.