கோலாலம்பூர், மார்ச் 7 – டத்தோஸ்ரீ பழனிவேலின் குறைகளை சுட்டிக்காட்டினேனே தவிர, அவருக்கு எதிராக தனிப்பட்ட தாக்குதல் நடத்தவில்லை என்று ம.இ.கா கெப்போங் தொகுதித் தலைவர் எஸ்.வேள்பாரி கூறியுள்ளார்.
ம.இ.கா தேசியத் தலைவர் மற்றும் இயற்கைவளம், சுற்றுச்சூழல் அமைச்சரான பழனிவேல், நாட்டில் புகைமூட்டம் கண்ணை மறைக்கும் அளவிற்கு சூழ்ந்திருக்கும் நிலையிலும், அதன் அபாயம் குறித்து மக்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் விடுக்காமல் இருந்ததால் தான் அவ்வாறு சுட்டிக்காட்டியதாக வேள்பாரி தெரிவித்துள்ளார்.
தனது பேரப்பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை என்றதும், கடந்த ஆண்டு ம.இ.கா மாநாடு முடிந்த கையோடு ஆஸ்திரேலியாவுக்கு பறந்த பழனிவேல், ஒரு தலைவராக இங்குள்ள மக்கள் மீதும் அந்த அக்கறையைக் காட்டியிருக்க வேண்டும் என்றும் வேள்பாரி குறிப்பிட்டார்.
அதே வேளையில், தான் குறைகளை சற்று கடுமையாகவே சுட்டிக்காட்டியிருப்பதாக ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் கே.பி.சாமி கூறியதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் வேள்பாரி தெரிவித்தார்.
நாடு முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்திருக்கும் நிலையில், புகையோடு புகையாக பழனிவேலும் மாயமாய் மறைந்து விட்டார் என்றும், அவருக்கு மலேசிய மக்கள் மீது அக்கறையில்லை. சீனாவில் இருந்து வரவிருக்கும் பாண்டா கரடிகளை பராமரிப்பதில் தான் அக்கறை என்றும் நேற்று முன்தினம் வேள்பாரி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.