லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 7 – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சர்வாதிகாரி ஹிட்லரை போல செயல்படுகிறார் என, அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து தனிநாடாக செயல்படும் உக்ரைனில், கடந்த மாதம் மக்கள் புரட்சி ஏற்பட்டது. இந்த நாட்டை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்கும்படி மக்கள் கோரினர்.
ஆனால், அதிபராக இருந்த விக்டர் யானுகோவிச் இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டார். மக்களின் ஆர்ப்பாட்டம் அதிகரித்ததால், யானுகோவிச் தலைமறைவானார். இதற்கிடையே இடைக்கால அரசு, ரஷ்ய மக்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி, ரஷ்ய படைகள், உக்ரைன் நாட்டை முற்றுகையிட்டன. உக்ரைனில் உள்ள ரஷ்ய மக்களை காப்பாற்றுவது என் கடமை. எனவே தான் ரஷ்ய படைகள் அனுப்பப்பட்டுள்ளது என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துஇருந்தார்.
இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஐரோப்பிய தலைவர்கள் இது குறித்து விவாதித்து வருகின்றனர். அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளின்டன் குறிப்பிடுகையில், ஜெர்மன் மக்களை பாதுகாப்பதாக கூறி, முன்னால் சர்வாதிகாரி ஹிட்லர், போலந்து உள்ளிட்ட நாடுகள் மீது போர் தொடுத்தார்.
இதே வேலையை தான், தற்போது ரஷ்ய அதிபரும் செய்கிறார். உக்ரைன் விஷயத்தில் புடின் முரட்டு தனமாக செயல்படுகிறார் என்றார். இதற்கிடையே உக்ரைன் முன்னால் தலைவர்கள், யானுகோவிச் உள்ளிட்ட 17 -பேரின் சொத்துக்களை ஐரோப்பிய யூனியன் முடக்கியுள்ளது.