லண்டன், மார்ச் 7 – ஒரு நாளைக்கு 6 சிறியக் கரண்டிக்குமேல் சர்க்கரை எடுத்துக்கொள்ளக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு குளிர்பானம் உள்ளிட்டவற்றை கொடுக்கக் கூடாது என்றும், அதில் அபாயகரமான அளவில் சர்க்கரை இருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
6 சிறியக் கரண்டிக்குமேல் சர்க்கரை எடுத்துக்கொண்டால், அது உடல் பருமன், இதய நோய் உள்ளிட்ட பல பெரும் பிரச்சனைகளுக்கு இட்டுச் சென்று விடும். புகையிலை எந்த அளவுக்கு உடலுக்கு தீங்கானதோ அதே போல சர்க்கரையும் அளவுக்கு மீறினால் நஞ்சாகி விடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.
உலகம் முழுவதும் சர்க்கரை வியாதி காரணமாக பல குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே இறப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. லண்டனைச் சேர்ந்த இதயவியல் நிபுணர் கிரஹாம் மெக்கிரேகர் கூறுகையில், தேவையில்லாமல் சரக்கரையை சேர்த்துக் கொள்வது அபாயகரமானது. சர்க்கரை வியாதி, உடல் பருமன், ஆகியவற்றை இது ஏற்படுத்தும்.
பல காலமாக சர்க்கரையை அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்தபடியுள்ளன. இருப்பினும் இதில் ஆய்வுகள் போதுமானதாக இல்லை என்றார்.
இதற்கிடையே, சர்க்கரை அளவை உணவுகளில் குறைக்கும் நடவடிக்கைகளும் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கலோரி அளவு அதிகம் உள்ள குளிர்பானங்களுக்குக் கூடுதல் வரி விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் முடக்கி விடப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் 2050-ஆம் ஆண்டு வாக்கில், உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு 50 பில்லியன் பவுண்டுகள் வரை பொருளாதார பாதிப்பும் ஏற்படும்.
தயிர்,குளிர்பானம், போன்றவற்றை குழந்தைகளுக்குக் கொடுக்கவே கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் குழந்தைளுக்கு ஒரு நாளைக்கு 6 சிறியக் கரண்டிக்குக் குறைவாகவே சர்க்கரை தர வேண்டும் எனக் கூறியுள்ளனர்.