புத்ரா ஜெயா, மார்ச் 7 – அன்வார் இப்ராகிமின் ஓரினப் புணர்ச்சி மீதிலான வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு இன்று 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
கடந்த 2008ஆம் ஆண்டில் தனது உதவியாளர் முகமட் சைபுல் புக்காரி மீது ஓரினப் புணர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பது மீதிலான வழக்கில் உயர் நீதிமன்றத்தால் அன்வார் விடுதலை செய்யப்பட்ட முடிவை எதிர்த்து மத்திய அரசாங்கம் செய்திருந்த மேல் முறையீடு மீதிலான விசாரணை நேற்றும் இன்றும் நடைபெற்றது.
இன்று வழக்கின் முடிவில் அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இருப்பினும், உச்ச நீதிமன்றத்திற்கு அவர் மீண்டும் மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்கிய நீதிமன்றம் அதுவரை அவருக்கு பத்தாயிரம் ரிங்கிட் ஜாமீன் வழங்கியதோடு, ஒரு நபர் உத்தரவாதத்தையும் நிர்ணயித்தது.
ஆனால், நீதிமன்ற தீர்ப்பு வெளியிடப்பட்ட தருணத்தில் நீதிமன்ற அலுவலகம் மூடப்பட்டுவிட்ட காரணத்தால், அன்வார் தனது ஜாமீன் தொகையை திங்கட்கிழமை காலை 11 மணிக்குள் செலுத்தவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அன்வார் வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட அன்வாரின் விந்து சம்பந்தப்பட்ட ஆதாரங்களை உயர் நீதிமன்றம் முறையாக அணுகவில்லை எனக் காரணம் கூறி மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த முடிவை எடுத்தது.