Home Kajang by-Election காஜாங்கில் அன்வாருக்குப் பதிலாக வான் அஸிஸா போட்டியிடுவாரா?

காஜாங்கில் அன்வாருக்குப் பதிலாக வான் அஸிஸா போட்டியிடுவாரா?

777
0
SHARE
Ad

Wan-Azizah1-300x199கோலாலம்பூர், மார்ச் 7 – ஓரினப்புணர்ச்சி மேல்முறையீட்டு வழக்கில் அன்வாருக்கு இன்று நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

எனினும், அன்வாருக்கு பத்தாயிரம் ரிங்கிட் ஜாமீன் வழங்கியதோடு, ஒரு நபர் உத்தரவாதத்தையும் நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில், காஜாங் இடைத்தேர்தலில் பிகேஆர் வேட்பாளராக களமிறங்க இருந்த அன்வார், தற்போது குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர் போட்டியிடும் தகுதியை இழப்பார் என்று கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் மாநில அரசியலமைப்பின் படி, ஒரு வருடத்திற்கு மேல் சிறை தண்டனையோ அல்லது 2000 ரிங்கிட்டிற்கு அதிகமாக அபராதமோ விதிக்கப்பட்டால், அந்த நபர் வேட்பாளர் தகுதியை இழப்பார். அதன்படி அன்வார் அந்த தகுதியை இழந்து விட்டார் என்று அரசியலமைப்பு வழக்கறிஞரான ஷியாஹிரிஸன் ஜோஹன் கூறியுள்ளார்.

எனினும், அன்வாரின் மேல்முறையீடுகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் வரை அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காஜாங்கில் வான் அஸிஸா போட்டியிடுவாரா?

இந்நிலையில், காஜாங் தொகுதியில் அன்வாருக்குப் பதிலாக அவரது மனைவியான வான் அஸிஸா வான் இஸ்மாயிலோ அல்லது அன்வாரின் மகளும், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இஸாவோ போட்டியிடலாம் என்று கூறப்படுகின்றது.

இதற்கு முன்னர், கடந்த 1998 ஆம் ஆண்டு, ஊழல் குற்றச்சாட்டில் அன்வார் சிறைக்கு சென்ற போது, அவருக்குப் பதிலாக பிகேஆர் கட்சியைத் தொடங்கி பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வான் அஸிஸா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் 2008 ஆண்டு வரை அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வான் அஸிஸா, அன்வார் அந்த ஆண்டு விடுதலையான போது, அவருக்கு வழிவிடும் பொருட்டு பதவி விலகினார்.

சரியான காரணம் இன்றி பதவி விலகியதால், அவருக்கு தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

தற்போது, அந்த தடை காலம் எல்லாம் கடந்து, தேர்தலில் போட்டியிட வான் அஸிஸா முழு தகுதியுடன் இருப்பதால் காஜாங் இடைத்தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

அன்வாருக்கு திங்கட்கிழமை பிணை வழங்கப்பட்டவுடன், காஜாங் இடைத்தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படலாம்.