Home நாடு MH370 : விசாரணைக்கு உதவ அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. புலனாய்வுக் குழு வருகை; பயங்கரவாதமா என்ற...

MH370 : விசாரணைக்கு உதவ அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. புலனாய்வுக் குழு வருகை; பயங்கரவாதமா என்ற கோணத்தில் ஆய்வு!

417
0
SHARE
Ad

FBI Logo 300 x 200மார்ச் 9 – காணாமல் போன MH370 மாஸ் விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரமடைந்திருக்கும் வேளையில், இந்த விவகாரத்தில் மலேசிய அரசாங்கத்திற்கு உதவ அமெரிக்காவின் எஃப்.பி.ஐ (FBI) எனப்படும் மத்திய புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் குழுவொன்று மலேசியாவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

திருடப்பட்ட ஐரோப்பிய பயணக் கடவுகளுடன் (பாஸ்போர்ட்) இரண்டு பேர் இந்த விமானத்தில் பயணம் செய்திருக்கின்றார்கள் என்ற தகவல் வெளியாகியிருப்பதைத் தொடர்ந்து, இந்த விமானம் மாயமானதில் பயங்கரவாதச் செயல் ஏதாவது நிகழ்ந்திருக்குமா என்ற சாத்தியத்திலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

இந்த விமானத்தில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் 4 பயணிகள் மீது குறிப்பாக விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

விமானம் காணாமல் போனதில் பயங்கரவாதச் செயல் ஏதாவது பின்னணியில் இருக்குமா என்ற கோணத்தில் அண்டை நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு புலனாய்வுத் துறையினர் விசாரணைகளைத் தொடக்கியுள்ளனர் என்று மலேசியத் தற்காப்பு அமைச்சரும், இடைக்கால போக்குவரத்து அமைச்சருமான ஹிஷாமுடின் ஹூசேன் அறிவித்திருக்கின்றார்.

இந்த அடிப்படையில்தான் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை தனது விசாரணை அதிகாரிகளையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் அனுப்பியுள்ளதாக அமெரிக்க தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமானம் காணாமல் போன விவகாரத்தில் பயங்கரவாதச் செயல் தொடர்பு ஏதும் இருப்பதாக இதுவரையில் தெரியவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கின்றது.

மாஸ் விமானம் காணமல் போனது ஒரு பரபரப்பான மர்ம நாவலைப் போன்று தொடர்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களால் உலக நாடுகளின் மக்களையும் தகவல் ஊடகங்களையும் ஒருசேரக் கவர்ந்துள்ளது.