மார்ச் 10 – மாஸ் MH370 விமானம் மாயமாகி 48 மணி நேரங்கள் ஆகியும் அதைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்காததால், ஒருவேளை உருகுலைந்து போயிருக்கலாமோ என்ற கோணத்திலும் மலேசிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், விமானத்தின் உடைந்த பாகங்கள் எதுவும் இதுவரை கிடைக்காததால், விமானம் 35,000 அடி உயரத்தில் இருந்து சிதைந்து கடலுக்குள் விழுந்திருக்கலாம் என தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடமிருந்து தகவல் கிடைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
அவ்வளவு உயரத்தில் இருந்து சிதைந்து கடலுக்குள் விழும் போது, நிச்சயம் அது கடலின் ஆழமான பகுதிக்குள் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
அதே வேளையில், போலி கடப்பிதழ்களுடன் (பாஸ்போர்ட்) இருவர் பயணம் செய்துள்ளதாகக் கூறப்படுவதால், விமானம் வெடித்திருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்ற கேள்விக்கு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இதுவரை அப்படி எதுவும் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. ஒருவேளை விமானம் நொறுங்கியிருந்தால் அது தொழில்நுட்பக் கோளாறாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, விமானத்தின் உடைந்த பாகங்களில் சிலவற்றை வியட்நாம் அதிகாரிகள் கடற்பகுதியில் கண்டுபிடித்துள்ளதாக, பல முக்கிய இணைய செய்திகள் கூறுகின்றன.
எனினும், அந்த பாகங்கள் MH370 விமானத்தின் பாகங்கள் தானா என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது.