Home நாடு காணாமல் போன விமானத்தை 40 கப்பல்களும் 34 விமானங்களும் தேடுகின்றன.

காணாமல் போன விமானத்தை 40 கப்பல்களும் 34 விமானங்களும் தேடுகின்றன.

476
0
SHARE
Ad

 MASமார்ச் 10 – காணாமல் போன MH370 மாஸ் விமானத்தைத் தேடுவதில் தற்போது 40 கப்பல்களும் 34 விமானங்களும் அயராது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. விமானங்கள் காணாமல் போன சம்பவங்களின் வரலாற்றில் இது போன்று மர்ம முடிச்சுகளோடு நிகழ்ந்த சம்பவம் அண்மையக் காலத்தில் நிகழ்ந்ததில்லை.

அதே போன்று, இத்தனை கப்பல்களும், விமானங்களும், தொழில் நுட்ப வசதிகளோடு தேடுதல் வேட்டையை மேற்கொண்டும் இரண்டு நாட்களாக காணாமல் போன விமானம் கிடைக்காமல் இருப்பது போன்ற சம்பவமும் அண்மையக் காலத்தில் நிகழ்ந்ததில்லை.

தற்போது விமானத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் விமானங்களும், கப்பல்களும் தென் சீனக் கடல் பகுதியில் காணப்பட்டதாகக் கூறப்படும் எண்ணெய்க் கசிவுகள் மற்றும் விமானத்தின் உடைந்த பாகங்கள் போல் மிதந்து தோற்றமளிக்கும் பொருட்களை மையமிட்டு தேடுதல் வேட்டையைத் தொடர்கின்றன.

#TamilSchoolmychoice

அவ்வளவு பெரிய விமானம் காணவில்லை என்றால் ஒன்று அப்படியே கடலுக்குள் விழுந்திருக்க வேண்டும் – அதனால் கடலின் ஆழத்திற்குள் முழு விமானமும் புதைந்திருக்கலாம் என்றொரு கோணத்தில் வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் விமானம் ஆகாயத்திலேயே வெடித்து சிதறியிருக்கலாம் என்றும் அதனால் அதன் பாகங்களைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது என்றும் தகவல் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

விமானம் பாதி வழியில் திரும்புவதற்கு முயற்சித்திருப்பது ராடார் கருவிகளில் பதிவாகியிருப்பதால், விமானம் ஏதோ ஒரு தொழில் நுட்ப பிரச்சனையையோ அல்லது வேறுவிதமான சிக்கலையோ எதிர்நோக்கியிருக்கக் கூடும் என்ற ஊகங்களுக்கு இடமளித்திருக்கிருக்கின்றது.

மேலும், திருடப்பட்ட பயணக் கடவுச் சீட்டுகளுடன் (பாஸ்போர்ட்) இரண்டு பேர் பயணம் செய்திருக்கின்ற காரணத்தால் விமானத்திற்கு பயங்கரவாதச் செயல் மூலம் ஆபத்து ஏதாவது ஏற்பட்டிருக்குமா என்ற சந்தேகத்தையும் கிளப்பியிருக்கின்றது.