நாகர்கோவில், மார்ச் 10 – நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு அலட்சியமாக செயல்படுவதாக ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான் தங்கத்தை ஆதரித்து, நாகர்கோவில் பொருட்காட்சி திடலில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது,
நடைபெறவிருக்கிற மக்களவைத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. இந்தியாவின் தலையெழுத்தை மாற்றி அமைக்க போகிறத் தேர்தல். கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை ஆண்டு வரும் மத்திய காங்கிரஸ் அரசு எல்லா வகையிலும் தோல்வியடைந்த அரசாகவும்,பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாகவுமுள்ளது. இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்.
மக்கள் நம்பிக்கையை காங்கிரஸ் அரசு இழந்து விட்டது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் விலைவாசி உயர்ந்து வருகிறது. இதில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றும் வகையில் ரேஷனில் விலையில்லா அரிசி வழங்கி வருகிறோம். வெளி சந்தையில் ரூபாய்-20-க்கு தரமான அரிசி வழங்கப்படுகிறது. பாமாயில், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு போன்றவை குறைந்த விலைக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
அதிமுக பங்களிக்கும் ஆட்சி மத்தியில் அமைந்தால் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளப்படும். மேலும் பாதுகாப்பு படை வீரர்கள் இன்னும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றிட, அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் தேவையான உதவிகளை, சலுகைகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என முதல்வர் ஜெயலலிதா பேசினார்.