கோலாலம்பூர், மார்ச் 11 – போலி கடப்பிதழ் வைத்திருந்த இரு பயணிகளில் ஒருவர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகியுள்ளது.
இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய தேசிய காவல்துறைத் தலைவர் காலிட் அபு பக்கார் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
அவர் பெயர் பௌரியா நூர் முகமட் மஹ்ரீட் (19) என்றும், அவர் தான் ஆஸ்திரியா நாட்டவரின் திருடப்பட்ட கடப்பிதழைப் பயன்படுத்தி MH370 விமானத்தில் பயணம் செய்துள்ளார் என்றும் காலிட் அறிவித்தார்.
எனினும், இவருக்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்பு இல்லை என்பதையும் காலிட் தெரிவித்தார்.
பௌரியா நூர் என்ற அந்த நபர் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி மலேசியாவிற்குள் நுழைந்தார் என்றும், 90 நாட்கள் சுற்றுலா விசாவில் வந்துள்ளார் என்றும் காலிட் குறிப்பிட்டார்.
ஜெர்மனிக்கு செல்வது தான் அவரின் நோக்கமாக இருந்துள்ளது என்றும் காலிட் தெரிவித்தார்.
இதனிடையே சந்தேகத்திற்குரிய அந்த இரண்டாவது நபர் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் காலிட் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி வெளியிட்ட அறிக்கையில், அவர்கள் இருவரும் ஆசியர்கள் போல் தோற்றமளித்தனர் என்று தெரிவித்தார்.
ஆனால் உள்நாட்டு போக்குவரத்துத் துறை தலைவர் அஸாருதீன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அவர்கள் இருவரும் ஆசியர்கள் அல்ல. கால்பந்து வீரர் பாலோடெல்லி போல் இருந்தனர் என்று அறிவித்தார்.
இருவருமே கறுப்பாக இருந்தனரா? என்ற கேள்விக்கும் அஸாருதீன் ஆம் என்று பதிலளித்தார்.
ஆனால், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
மலேசிய அதிகாரிகளின் இது போன்ற முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் மக்களிடையே பெரிதும் குழப்பத்தை ஏற்படுத்துவது நிச்சயம்.
அதே வேளையில், அந்நிய நாட்டு பத்திரிக்கைகளின் குறை கூறல்களுக்கும் உள்ளாவது குறிப்பிடத்தக்கது.