Home நாடு அன்வாரின் அரசியல் தலைவிதி கூட்டரசு நீதிமன்ற தீர்ப்பில் உள்ளது!

அன்வாரின் அரசியல் தலைவிதி கூட்டரசு நீதிமன்ற தீர்ப்பில் உள்ளது!

523
0
SHARE
Ad

Anwar-Ibrahim-Konvensyen-Days-Saing-Komoditi-01கோலாலம்பூர், மார்ச் 12 – ஓரினப்புணர்ச்சி வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்து விட்டதால், இனி எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் அரசியல் தலைவிதி கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பில் தான் உள்ளது.

தனது முன்னாள் உதவியாளர் சைபுல் புகாரி அஸ்லானை ஓரினப்புணர்ச்சிக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 7 ) ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம்  அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

அதனால், காஜாங்கில் போட்டியிடும் தகுதியை அன்வார் இழந்தார். அதனைத் தொடர்ந்து தனது மனைவி வான் அஸிஸா வான் இஸ்மாயிலை பிகேஆர் சார்பாக வேட்பாளராக கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) ஆம் தேதி அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வார் இப்ராகிம் தொடந்து தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட வேண்டுமானால், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து தான் தீர வேண்டும்.

காரணம், அரசியலமைப்பின் படி, ஒரு வருடத்திற்கு மேல் சிறை தண்டனையோ அல்லது 2000 ரிங்கிட்டிற்கு அதிகமாக அபராதமோ விதிக்கப்பட்டால், அந்த நபர் மக்கள் பிரதிநிதி என்ற தகுதியை இழப்பார். எனவே, அன்வாருக்கு இருக்கும் ஒரே வழி கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது மட்டுமே.

அதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றமும் அனுமதி வழங்கியதால், கடந்த திங்கட்கிழமை (மார்ச் 10) ஆம் தேதி நீதிமன்ற பதிவதிகாரி அலுவலகத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான மனுவை தனது வழக்கறிஞர் கர்ப்பால் சிங் மூலமாக பதிவு செய்தார்.

அன்வாரின் மேல்முறையீடுகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் வரை அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கலாம் என்று சட்டத்துறை வல்லுநர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கர்பால் சிங்கிற்கு 4000 ரிங்கிட் அபராதம்KARPAL

இதனிடையே, கடந்த 2009 ஆம் ஆண்டு, பேராக் மந்திரி பெசார் முகமட் நிஸார் ஜமாலுடினை பதவி நீக்கியதற்காக, அம்மாநில சுல்தானுக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை வெளியிட்டார் என கர்ப்பால் மீது குற்றம் சாட்டப்பட்டு நேற்று அவருக்கு 4000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

கர்ப்பாலுக்கு சிறை தண்டனை விதிக்கப்படாத காரணத்தினால், அவரால் அன்வாரின் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்து நடத்திச் செல்ல முடியும் என்பது அன்வாரின் வழக்கில் பக்கபலம் சேர்த்துள்ளது.

காரணம் இந்த வழக்கை தொடக்கத்தில் இருந்து கையாண்டு வருபவரான கர்ப்பால் சிங்கிற்கு, அதிலுள்ள பலம், பலவீனம் அனைத்தும் தெரியும்.

அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் இந்த வழக்கை வேறு ஒருவர் எடுத்து நடத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.

ஒருவகையில், கர்ப்பாலுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு அன்வாரின் வழக்கிற்கும் சாதகமாகவே அமைந்துள்ளது.

கூட்டரசு நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது

ஓரினப்புணர்ச்சி வழக்கில், கூட்டரசு நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது என்பதால் அன்வாரின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையும்  அத்தீர்ப்பில் தான் உள்ளது.

தீர்ப்பு சாதகமாக வந்தால் மட்டுமே, அடுத்த பொதுத்தேர்தலுக்குள் பக்காத்தானை, தேசிய முன்னணிக்கு எதிராக இன்னும் பலமுள்ள அணியாக மாற்றி, பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க முடியும்.

ஒருவேளை தீர்ப்பு எதிராகும் பட்சத்தில், இந்த 67 வயதில் அன்வார் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்.

Wan-Azizah1-300x199இதை நினைத்து தான் அவரது மனைவி வான் அஸிஸாவும் மிகவும் கவலையடைந்துள்ளார். 5 ஆண்டுகள் சிறை தண்டனை என மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை கேட்டவுடன் தன்னால் கண்ணீரை கட்டுப்படுத்த இயலவில்லை என்று கூறியுள்ளார்.

ஊழல்  வழக்கில் 16 ஆண்டுகளுக்கு முன்னர் அன்வாருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு  6 ஆண்டுகள் குடும்பத்தை விட்டு சிறையில் வாடியதாகவும், இனி இந்த வயதிலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமா? என்பதை நினைத்து தான் மிகவும் உடைந்து போனதாகவும் வான் அஸிஸா கூறியுள்ளார்.

பல சவால்களை கடந்து வந்து விட்ட அன்வாரின் வாழ்க்கையில், இந்த ஓரினப்புணர்ச்சி வழக்கு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

– பீனிக்ஸ்தாசன்