Home நாடு MH 370 – உடைந்த விமானப் பாகங்களின் துணைக்கோள படங்களை சீன இராணுவம் வெளியிட்டது.

MH 370 – உடைந்த விமானப் பாகங்களின் துணைக்கோள படங்களை சீன இராணுவம் வெளியிட்டது.

1119
0
SHARE
Ad

MAS Boeing 777 (2) - 440 x 215மார்ச் 13 – தென் சீனக் கடலில் உடைந்த விமானத்தின் பாகங்கள் மிதந்து கொண்டிருக்கும் துணைக் கோளப் படங்களை சீன இராணுவ இலாகா ஒன்று நேற்று வெளியிட்டுள்ளது. காணாமல் போன விமானம் சென்ற பாதையில் இந்த உடைந்த பாகங்கள் கிடந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த படங்கள் விமானம் காணாமல் போன ஒரு நாள் கழித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்டவை என்பது தெரிய வந்துள்ளது. ஏன் இந்த படங்கள் இவ்வளவு தாமதாக வெளியிடப்படுகின்றன, ஏன் உடனடியாக இந்த தகவல்கள் மலேசியாவுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.

அண்டை நாடுகளின் தகராறுக்கு உட்பட்ட தென் சீனக் கடல் பகுதியில் தான் கொண்டுள்ள இராணுவ துணைக் கோள சக்தியை வெளியுலகுக்கும் அமெரிக்காவுக்கும் தெரியப்படுத்திவிடக் கூடாது என்ற கோணத்தில் சீனா இந்தப் படங்களை வெளியிடுவதற்கு தயங்கியிருக்கலாம் அல்லது தாமதப்படுத்தியிருக்கலாம் என சிஎன்என் தொலைக்காட்சி கருத்து தெரிவித்துள்ளது.

இந்த உடைந்த பாகங்கள் 70 அடிக்கும் மேலான நீளமும் அகலமும் உடையவை என்றும் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று கருதப்படும் கடல் பகுதியில் இவை மிதந்து கொண்டிருப்பது துணைக்கோள படங்களின் வழி அறியப்பட்டுள்ளதாகவும் சீன இராணுவ இலாகா அறிவித்துள்ளது.

மலேசியாவுக்கும் வியட்னாமுக்கும் இடையில் உள்ள தென் சீனக் கடல் பகுதியில் இந்த உடைந்த பாகங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இவை MH 370 விமானத்தின் உடைந்த பாகங்கள்தானா என்பதை உறுதிப்படுத்த மேலும் சில நாட்கள் பிடிக்கலாம் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் சீனா 10 துணைக்கோளங்களை பணியில் ஈடுபடுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.