Home நாடு MH 370 – இந்தியப் பெருங்கடலுக்குள் விழுந்ததா? அமெரிக்க போர்க்கப்பல் தேடுதலில் இணைந்தது.

MH 370 – இந்தியப் பெருங்கடலுக்குள் விழுந்ததா? அமெரிக்க போர்க்கப்பல் தேடுதலில் இணைந்தது.

472
0
SHARE
Ad

American warship 440 x 215மார்ச் 14 – தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னர் சில மணி நேரங்கள் காணாமல் போன விமானம் பறந்திருக்கக் கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, தேடுதல் வேட்டை தற்போது இந்தியப் பெருங்கடல் வரை விரிவடைந்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்தியப் பெருங்கடல் பகுதியில் விமானம் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பகுதி ஒன்றை அடையாளம் கண்டு, அதனை நோக்கி தேடுதலில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களின் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலுக்குள் விமானம் விழுந்திருக்க வாய்ப்பு அதிகரித்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்று சிஎன்என் தொலைக்காட்சி தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

பிங்க்ஸ் (PINGS) எனப்படும் விமானம் பறந்து கொண்டிருப்பதற்கான சமிக்ஞை அறிகுறிகள், விமானம் காணாமல் போனதற்குப் பின்னர் சுமார் 5 மணி நேரங்கள் செயல்பட்டிருக்கின்றன என்ற புதிய தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேடுதலில் தற்போது இணைந்துள்ள அமெரிக்க போர்க்கப்பலின் தளபதி சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த தொலைபேசி பேட்டியில் தேடுதல் வேட்டை தற்போது புதியதொரு கட்டத்தை அடைந்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும், தேடுதலில் ஈடுபட்டுள்ளவர்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியில் ஈடுபடுவதால், அவர்கள் சோர்வடையும் அபாயம் இருப்பதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

விமானத்தைத் தேடும் பணியில் மலேசிய அரசாங்கமும் அதிகாரிகளும் முழுமையான தகவல்களைத் தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்தான் சில தொழில் நுட்பத் தகவல்களை மலேசியா அமெரிக்காவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது என்றும் இது போன்ற தேடுதல் பணிகளில் சிறந்த தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ள அமெரிக்காவிடம் முழுமையான தகவல்கள் தரப்பட்டிருந்தால் தேடுதல் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவும் தேடுதலில் மும்முரம்

இதற்கிடையில், இந்தியாவின் ஆகாயப் படை, கடற்படை மற்றும் கடலோரக் காவற் படையினர் என சம்பந்தப்பட்ட பிரிவுகள் அனைத்தும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன.

கோலாலம்பூரிலுள்ள மலேசியாவுக்கான இந்தியத் தூதரின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் இந்த முடிவை எடுத்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.