கோலாலம்பூர், மார்ச் 14 – பேஸ்புக் தனது வர்த்தகம், கல்வி, பிரபலங்கள் போன்ற பக்கங்களின் வடிவமைப்பை (Layout), தனிப்பட்ட பக்கங்களுக்கு (Personal Pages) நிகராக புதுப்பிக்கவுள்ளது.
அண்மையில் பேஸ்புக் வெளியிட்ட அதன் மாதிரி படத்தில், இந்த புதுப்பிக்கப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் வலது பக்கத்தில் அகலமான காலக்கெடு (Timeline) மற்றும் இடது பக்கத்தில் மொத்தம் பெற்ற விருப்பங்கள் (Likes) மற்றும் அந்த பக்கத்தை எத்தனை பேர் பயன்படுத்துகின்றனர் போன்ற பட்டியலும் இடம்பெற்றிருந்தது.
அதே நேரத்தில் அந்த குறிப்பிட்ட பக்கத்திற்கு நண்பர்களை அழைக்கும் (Invite) வசதியும் செய்யப்பட்டிருந்தது.
இந்த புதிய வடிவமைப்பு, குறிப்பிட்ட பக்கங்களை நிர்வகிப்பவர்களுக்கு எளிதில் மற்றவர்களுக்கு பகிரவும், நண்பர்களை இணைத்துக்கொள்ளவும், தேவைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளவும் முடியும் என்று பேஸ்புக் அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், தனிப்பட்ட பேஸ்புக் பக்கங்களையும் விரைவில் புதுப்பிக்கவுள்ளதாகவும் பேஸ்புக் அறிவித்துள்ளது.
ஆனால் மேற்கூறிய இரண்டு புதுப்பிப்பும், இணையத்தளத்தில் மட்டுமே, செல்பேசி செயலிக்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.