இஸ்லாமாபாத், மார்ச் 14 – பாகிஸ்தானில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பசி, பட்டினியில் இதுவரை 160 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியானது. பாகிஸ்தான் மற்றும் இந்திய எல்லையில் தார் பாலைவனத்தை ஒட்டியுள்ள சிந்து மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த மாகாணத்தில் பஞ்சத்தால் 70 பேர் பலியாகியுய்ள்ளனர் என்று அதிகாரிகள் கூறினர். எனினும் இதுவரை 160 பேர் பலியாகியுள்ளதாக கூறுகின்றனர். தார் பாலைவனத்தை ஒட்டியுள்ள சிந்து மாகாணத்தில் கடும் வறட்சி காரணமாக மக்களுக்கு ஊட்டச் சத்து உணவு கிடைக்கவில்லை.
இதனால் அங்கு உள்ளவர்களுக்கு நிமோனியா & மூளை காய்ச்சல், வயிற்று போக்கு, கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறந்ததும் இறப்பது மற்றும் முன்கூட்டியே பிரசவம் போன்ற நோய்களால் பெருமளவில் பலியாகியுள்ளனர். இங்குள்ள மருத்துவமனையில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட 300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தர்பார்கர் மாவட்ட மருத்துவ கண்காணிப்பாளர் ஜலீல் கூறினார்.
சிந்து மாகாணத்தில் ஏற்பட்ட பஞ்சத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் மற்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். மேலும், பஞ்சத்தால் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளையடித்து வருகின்றனர். இதனால் பதற்றம் நிலவுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கடந்த வாரம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் புட்டோ சர்தாரியுடன் தர்பார்கர் மாவட்டத்துக்கு விரைந்து வந்தார். அப்பிராந்தியத்தில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க 100 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.