டெல்லி, மார்ச் 14 – தி.மு.க.,விலிருந்து விலக்கப்பட்டுள்ள, தென் மண்டல அமைப்பு செயலர் அழகிரி, நேற்று டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியது, தி.மு.க., வட்டாரத்தில் அதிர்ச்சி அலையையும், அரசியல் வட்டாரத்தில், திடீர் பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.
எதிர்கால நடவடிக்கை குறித்து, இரண்டு மாதத்தில் முடிவு செய்யவிருப்பதாக கூறியிருந்த அழகிரி, இப்போதே, தன் ஆட்டத்தை துவங்கி விட்டார் என்றும், அதற்கான அறிகுறிகள் தான் இந்த சந்திப்புகள் என்றும், அவரது ஆதரவு வட்டாரம் தெரிவிக்கிறது.
தி.மு.க கட்சித் தலைவரும் தந்தையுமான, கருணாநிதி, தன்னை கட்சியிலிருந்து, நீக்கியது அழகிரிக்கு அதிக மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதை அடுத்து, மதுரையில் வரும் 16-ஆம் தேதி ஆதரவாளர்களைக் கூட்டி, அடுத்த கட்ட திட்டம் குறித்து முடிவெடுக்கப் போவதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அழகிரியின் இந்த அதிரடி வேகமும், திடீர் சந்திப்புகளும், அவர் ஏதோ ஒரு புது திட்டத்துடன் களம் இறங்கப் போகிறார் என்பதை உறுதிபடுத்தின. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. பிரிந்து சென்றதற்கு, இந்த சந்திப்பின்போது, அழகிரியிடம், பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதற்கு விளக்கமளித்த அழகிரி, தனக்கு அதில் உடன்பாடு இலலை என்றும், தி.மு.க.வின் செயல்பாடு கொஞ்சம் கூட நியாயமற்றது என்றும் பிரதமரிடம் கூறியுள்ளார். மேலும், காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் அளித்ததற்காக, பிரதமருக்கு நன்றி தெரிவித்த அழகிரி, ‘தொடர்ந்து காங்கிரசுக்கு, நன்றியுடையவனாக இருப்பேன்’ என்றும் உத்தரவாதம் அளித்துள்ளதாக தெரிகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்கவே, அழகிரி டில்லி சென்றார். ஆனால், தேர்தல் பிரசார வேலைகளில் மும்முரமாக இருந்ததால், சோனியாவை, அழகிரியால் சந்திக்க முடியவில்லை. அதனால், மீண்டும் டில்லி சென்று, சோனியாவை சந்திக்க திட்டமிட்டுள்ள அழகிரி, இன்று, சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்திக்கவுள்ளார்.
அதற்காக நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளார். டில்லியில், பிரதமரை சந்தித்த பின், மிகுந்த உற்சாகத்துடன் அழகிரி அளித்த பேட்டியில், பிரதமரை, சந்தித்துப் பேசினேன். அவருடன், நான்கு ஆண்டுகள், அமைச்சராக பணியாற்றியவன் நான். ஆட்சி நிறைவடையப் போகும் சூழ்நிலையில், அவருடன் பணியாற்றியவன் என்ற வகையில், நன்றி சொல்வதற்காக, வந்தேன்.
மேலும் மதுரை விமான நிலையத்திற்கு, முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டுமென்று, கோரிக்கை வைத்தேன். மற்றபடி, அரசியல் எதுவும் பேசவில்லை. சென்னையில் இன்று தங்கியிருக்கும் அழகிரி, ரஜினிகாந்தை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.