சென்னை, மார்ச் 14 – மு.க. அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் விரும்பினால், காங்கிரஸில் இணையலாம் நாங்கள் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திமுக-விலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மு.க.அழகிரி, தனது ஆதரவாளர்கலுடன் சென்று, பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தலில் எங்கள் பங்கு நிச்சயம் இருக்கும் என்று, மு.க.அழகிரி பேட்டியளித்துள்ளார்.
இதனால் மு.க.அழகிரி வேறு கட்சியில் சேர்ந்து திமுக-வுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போகிறாரா? என்று எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் அழகிரியின் சந்திப்பு குறித்து, கருத்து கூறியுள்ள காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது,
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மத்திய காங்கிரஸ் அமைச் சரவையில் இடம்பெற்றிருந்த மு.க.அழகிரி, எந்தவித பிரச்சனைகளுமின்றி இனிமையாக பணியாற்றினார்.அவர் பிரதமரை சந்தித்துப் பேசியது மரியாதை நிமித்தமானதாகவே நினைக்கிறேன்.
மு.க.அழகிரி காங்கிரஸில் சேரப் போகிறாரா என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிதான் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க முடியும். அழகிரி மட்டுமல்ல யாராக இருந்தாலும், காங்கிரஸின் கொள்கையில் ஈர்ப்பு கொண்டு, கட்சியில் சேர விரும்பினால், அவர்களை விருப்பு, வெறுப்பில்லாமல் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
கூட்டணியில்லை என்பதால் அனைத்து தொகுதிகளிலும் வலுவான பிரச்சாரம் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில்தான், வாசன் தேர்தலில் போட்டியிடவில்லை என்று நான் நினைக்கிறேன். மிகப் பெரிய தேசிய கட்சி காங்கிரஸ்.
எங்கள் கட்சிக்கு அழகிரியை வைத்துத்தான் திமுகவை எதிர்த்துத் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.