கோலாலம்பூர், மார்ச் 14 – மாயமான மாஸ் விமானம் MH370 ஐ தேடும் பணி கிழக்கு கடல் பகுதியிலிருந்து, தீபகற்ப மலேசியாவரை நீண்டுள்ளது.
காரணம், விமானம் காணாமல் போன அன்றைய நேரத்தில் சரியாக அதிகாலை 2.55 மணியளவில், வியட்நாமின் தென்முனையில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும், அதனால் கடலில் ஏற்பட்ட மாற்றம் விமானத்தை தாக்கியிருக்கலாம் என்றும் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சீன ஆய்வு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பூகம்ப ஆய்வாளர்கள் குழு ஒன்று, விமானம் காணாமல் போன மார்ச் 8 ஆம் தேதி, வியட்நாம் மற்றும் மலேசியாவிற்கு இடையே கடல் தளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கண்டறிந்துள்ளனர்.
“அது நிலநடுக்கம் ஏற்படாத பகுதி. ஆனால் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்ட நேரம் மற்றும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்ததன் மூலம், காணாமல் போன விமானத்திற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருதுகின்றோம்” என்று அந்த பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, இதுவரை சீனாவின் தெற்கு கடல் பகுதியில் தேடுதல் பணியை நடத்தில் வந்த அமெரிக்க அதிகாரிகள், இந்திய கடலை நோக்கி தங்களது பணியை முடுக்கியுள்ளனர். காரணம் விமானம் தொடர்பை இழந்து சில மணி நேரங்கள் பறந்திருப்பதாக அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளனர்.