கொழும்பு, மார்ச் 15 – சுவிட்சர்லாந்தின், ஜெனிவா நகரில் நடைபெறும், சர்வதேச மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தை முறியடிக்க, அதிபர், ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு, அணி சேரா நாடுகளின் ஒத்துழைப்பை நாடியுள்ளது.
இலங்கையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், விடுதலை புலிகளுடன் நடந்த சண்டையின் போது, மனித உரிமை மீறல் நடந்தது குறித்து, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், என, ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
ஜெனிவாவில் நடந்த, சர்வதேச மனித உரிமை கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக, கடந்த, இரண்டு ஆண்டுகளாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டும், அந்நாட்டுக்கு எதிராக, தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச விவகாரங்களில், அமெரிக்கா, ரஷ்யா என, எந்தவொரு பெரிய நாடுகளின் கீழும் செயல்பட மறுக்கும், 120 நாடுகளை கொண்டது, அணிசேரா நாடுகள் எனும் அமைப்பு.
இதை, இந்திய நாட்டின் முதல் பிரதமர், ஜவகர்லால் நேரு உட்பட, சில நாடுகளின் தலைவர்கள், 1961-ல் துவக்கினர். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முறியடிக்க, அணிசேரா நாடுகள், உதவ வேண்டும் என, இலங்கை அதிபரின் பிரதிநிதி, மகிந்தா சமரசிங்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சமரசிங்கே கூறியதாவது, இலங்கைக்கு தற்போது நேர்ந்துள்ள நிலைமை, நாளை மற்ற அணிசேரா நாடுகளுக்கும் ஏற்படலாம். போரின் போது குடிபெயர்ந்த மூன்று லட்சம் தமிழர்களின் நலனை, அரசு பாதுகாத்துள்ளது. விடுதலை புலிகள் படையில் இருந்த, 12 ஆயிரம் பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு உள்ளது.
போர் முடிந்து, ஐந்து ஆண்டுகளுக்குள், இலங்கை அரசு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இருப்பினும், இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதை, அணிசேரா நாடுகள் எதிர்க்க வேண்டும் என சமரசிங்கே கூறினார்.
2009- மே மாதம் நடந்த பயங்கர போரில், புலிகள் அமைப்பின் தலைவர், பிரபாகரன் கொல்லப்பட்டதை அடுத்து உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. இலங்கையில் நடந்த இறுதிப் போரில், லட்சக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான தமிழர்களை, இலங்கை ராணுவம் குண்டு வீசி கொன்றது.
மனித உரிமை மீறல்கள், பரவலாக நடந்தன என, இலங்கை தமிழர்களும், தமிழர்களுக்கு ஆதரவான அமைப்புகளும், தொடர்ந்து வலியுறுத்தி, இலங்கை அரசுக்கு எதிராக, சர்வதேச அமைப்புகளில் முறையிட்டு வருகின்றன. இந்த நெருக்கடியால் தான், ராஜபக்சே அரசு, இப்படிப்பட்ட நிலையில் தவிக்கிறது.