சென்னை, மார்ச் 15 – சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை மு.க.அழகிரி நேற்று திடீரென சந்தித்தார். இதனால் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. தி.மு.க. தென்மண்டல அமைப்பு பொது செயலாளர் மு.க.அழகிரி. சில மாதங்களுக்கு முன்பாக தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் தி.மு.க. நடவடிக்கைகளில் ஒதுங்கியே இருந்தார். இதனால் அவர் தனிக்கட்சி தொடங்குவார் என்றும் அரசியலில் பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன்சிங்கை திடீரென்று சந்தித்தார்.
மரியாதை நிமித்தமாக தான் பிரதமரை சந்தித்தேன் என்று மு.க.அழகிரி கூறினார். இதையடுத்து, நேற்று காலை 10.30 மணிக்கு சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்திற்கு, முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி நேரடியாக சென்று சந்தித்தார்.
சுமார் 30 நிமிடம் இந்த சந்திப்பு நடைபெற்றது. ரஜினிகாந்துடன் சந்திப்பை முடித்து வெளியே வந்த மு.க.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
நானும், ரஜினியும் 20–25 வருட கால நண்பர்கள். எனது மகன் படம் எடுக்க போகிறான். அதை குறித்து கேட்கலாம் என்று வந்தேன். மேலும் தற்போது ரஜினிகாந்த் நடித்திருக்கிற கோச்சடையான் படத்தின் பாடலை கேட்டேன். அந்த பாடல் நன்றாக இருக்கிறது.
கோச்சடையான் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கவும் வந்தேன். ரஜினிகாந்த் என் நலம் விரும்பி, ஆகவே நான் மன ஆறுதலுக்காகவும் சந்திக்க வந்தேன் என மு.க.அழகிரி கூறினார். இந்த சந்திப்பின் போது மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி உடன் இருந்தார்.