கிருஷ்ணகிரி, மார்ச் 17 – அதிமுக அரசின் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என, கிருஷ்ணகிரியில் நடந்த பிரசார கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார். கிருஷ்ணகிரி கார்னேசன் திடலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு பிரசாரக் கூட்டம் நேற்று மாலை நடந்தது.
இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது, தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஜெயலலிதா சொல்கிறார். அதிமுக தான் மக்கள் விரோத ஆட்சி நடத்திக் கொண்டுள்ளது. அதை முடிவுக்கு கொண்டு வர மக்களாகிய உங்களால் தான் முடியும்.
தமிழகத்தில் ஊழலை ஒழிக்க நாங்கள் போராடுகிறோம். இந்தியா முழுவதும் ஊழலை ஒழிக்க நரேந்திர மோடியால் மட்டுமே முடியும். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை கொண்டு வருவேன் என ஜெயலலிதா கூறுகிறார். யாரிடம் கருப்பு பணம் உள்ளது என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.
இந்தியாவில் ஊழலற்ற ஆட்சி அமைய, நரேந்திர மோடி பிரதமராக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களியுங்கள்.
எனக்கு சாதி, மதம் கிடையாது. இந்தியா வல்லரசாக வேண்டும். அதே நேரத்தில் தமிழகத்தை நல்லரசு ஆள வேண்டும். திமுக ஆட்சியில் இருக்கும் போது தமிழ்நாடு இருண்டு விட்டதாக அதிமுக கூறியது.
இப்போது வெளிச்சம் வந்து விட்டதா? ஜெயலலிதா பிரசாரத்திற்கு செல்லும் போது மட்டும், போலீஸார் உச்சகட்ட பாதுகாப்பு வழங்குகிறார்கள். போலீஸாரின் நடவடிக்கை குறித்து நான் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யவுள்ளேன் என விஜயகாந்த் பேசினார்.
பிரசார கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும் என்று பேசினாரே தவிர, ஒரு முறை கூட கூட்டணி கட்சியான பாமகவின் வேட்பாளரான ஜிகே மணியின் பெயரையோ, அவருக்கு வாக்களிக்கும்படியோ பேசவில்லை. இது கூட்டணி கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.