மார்ச் 17 – சரவாக் மாநிலம் பாலிங்கியான் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி மற்றும் பக்கத்தானிடையே நேரடிப் போட்டி நடைபெறவுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலில், தேசிய முன்னணி வேட்பாளராக யூசிப்னோஷ் பாலோ (வயது 47) மற்றும் பிகேஆர் வேட்பாளர் அப்துல் ஜாலில் பூஜாங் (வயது 55) ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
இந்த இடைத்தேர்தலில் சுயேட்சையாக யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் மார்ச் 29 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 12 நாட்கள் பிரச்சாரத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பாலிங்கியான் தொகுதியில் 13,366 பேர் வாக்களிக்கத் தகுதியுடையவர்களாக இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சரவாக் மாநில முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட், தனது பதவியை ராஜினாமா செய்து, கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அம்மாநில ஆளுநராகப் பொறுப்பேற்றதால், அவரது தொகுதியான பாலிங்கியானில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.