சென்னை, மார்ச் 17 – முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தின்போது பேசியது குறித்து திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழகத்திற்கான மின் திட்டங்கள் தொடர்பாக முதல்வர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு கடிதம் மூலம் கருணாநிதி விரிவாகப் பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, 9-3-2012 அன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் படித்த ஒரு நீண்ட அறிக்கையில், 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம் என்னும் ஒரு புதிய திட்டம் சுமார் 3,960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்படுது.
இந்த அனல் மின் திட்டம் 2015-ஆம் ஆண்டு இறுதிக்குள் தனது உற்பத்தியைத் தொடங்கும் என்றும் அறிவித்தார். இதற்கான மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதி 24-1-2013 அன்றும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி 18-2-2013 அன்றும் கிடைத்து ஓராண்டு ஆகிறது.
இப்போதுதான் முதலமைச்சர் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் என்றால் மின் உற்பத்தியில் அ.தி.மு.க. அரசு எந்த அளவிற்கு அக்கறையோடு விரைவு காட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் சொல்வதற்குப் பதிலேதும் இல்லை என்பதால், அவர் எந்தவிதமான விளக்கமும் தரவில்லை. மாறாக அனைத்து மின் திட்டங்களையும் நான் பாதியில் விட்டேன் என்றும், தேவையான மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையில் முனைப்பு காட்டவில்லை என்றும் ,
அதற்காக எனக்கு மறக்க முடியாத “சம்மட்டி அடி” கொடுக்க வேண்டுமென்றும் ஆவேசத்தோடு கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா. அவர் சற்று நாவை அடக்குவது நல்லது என கருணாநிதி தெரிவித்துள்ளார். உடன்பிறப்பே, அம்மையார் விடையளிக்கிறாரோ, இல்லையோ? நீங்கள் இந்த விவரங்களை யெல்லாம் எடுத்துச் சென்று மக்களிடம் விளக்கிக் கூறவேண்டும்.
தமிழகத்தில் எப்படிப்பட்ட ஆட்சி நடைபெறுகிறது? எப்படியெல்லாம் வெற்று அறிவிப்புகளாலும், வீண் ஆரவாரங்களாலும் மக்களைத் திசை திருப்புகிறார்கள். என்பது பற்றியெல்லாம் மக்களுக்குத் தெளிவுபடுத்திட வேண்டும். அந்தப் பணியிலே நீங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை நான் நன்றாகவே அறிவேன்.
எனினும் தேவையான விவரங்களைத் தொகுத்து உனக்கு உதவிட வேண்டியது என் கடமை அல்லவா. அதைத்தான் நான் செய்து வருகிறேன் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.