ரஷ்யா, மார்ச் 18 – உக்ரைனில் இருந்து கிரிமியாவை பிரித்து ரஷ்யாவுடன் இணைக்கும் பொது வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டது. இதில், ரஷ்யாவுடன் இணைப்பதற்கு ஆதரவாக 95 சதவீதம் மக்கள் வாக்களித்தனர்.
இதனை ஏற்க மறுத்துள்ள அமெரிக்க அரசு, ரஷ்ய ராணுவத்தின் தலையீட்டின் பேரில் உக்ரைன் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இந்த வாக்கெடுப்பு நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டியது. மேலும், ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் தீர்மானித்துள்ளது.
இதனால் உக்ரைனில் நெருக்கடியான அரசியல் சூழல் நிலவுவதால், ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. நியூயார்க்கின் பிரதான ஒப்பந்ததாரரான வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட், ஏப்ரல் மாதம் விநியோகிக்கப்படும் கச்சா எண்ணெய் விலையை ஒரு பீப்பாய் 23 காசுகள் உயர்த்தி 99.12 அமெரிக்க டாலராக நிர்ணயித்துள்ளது.
அதேபோல் மே மாதம் விநியோகம் செய்யும் பிரென்ட் கச்சா எண்ணெய் 11 காசுகள் உயர்ந்து, 108.32 அமெரிக்க டாலர் என்ற அளவில் வர்த்தகம் ஆனது.
அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடையை விதித்தால் உக்ரைனில் இருந்து எரிவாயு மற்றும் எண்ணெய் விநியோகம் மேலும் பாதிக்கக்கூடும் என்று முதலீட்டாளர்கள் ஐயம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவின் 70 சதவீத எரிவாயு மற்றும் எண்ணெய் ஏற்றுமதி உக்ரைன் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.