கீவ், ஏப்ரல் 15 – கிரிமியாவைத் தொடர்ந்து உக்ரைனின் கிழக்குப் பகுதியில் பூதாகரமான ரஷ்ய இணைப்புப் போராட்டங்கள் உச்சகட்டத்தை அடைந்து வருகின்றது.
அரசு அலுவலகங்களில் இருந்து ரஷ்ய ஆதரவாளர்கள் வெளியேற காலக்கெடுவை விதித்துள்ள உக்ரைன் அரசு, அப்பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட ஐரோப்பாவின் சமாதானப் படைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து தன்னுடைய அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தில் அந்நாட்டின் தற்காலிக ஜனாதிபதி ஒலெக்சாந்தர் டர்சிநோவ் குறிப்பிட்டுள்ளதாவது,
“ரஷ்யா, கிரிமியாவில் செய்த அதே செயல்களை கிழக்குப் பகுதியிலும் செய்து வருகிறது. ஆனால் கிரிமியாவிற்கு ஏற்பட்ட நிலை உக்ரைனின் கிழக்குப் பகுதிகளுக்கு நடக்காது.
ஏனெனில் இங்கு இருக்கும் மக்களில் பெரும்பான்மையானோர் அதனை விரும்பவில்லை. தற்போதய சூழலில் உகரனின் படைகளும், ஐரோப்பிய அமைதிப்படைகளும் கூட்டாகச் சேர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
இது குறித்து ஐரோப்பிய அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் அரசு ரஷ்ய ஆதரவாளர்களை ஒடுக்க ஐரோப்பாவிற்கு அழைப்பு விடுத்துள்ள இந்த தருணத்தில், ரஷ்ய ஆதரவாளர்களுக்கு ஆபத்து நேரும் பட்சத்தில் ரஷ்யா எத்தகைய முடிவுகளையும் எடுக்கும் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.