Home உலகம் உலகப் பார்வை: என்ன நடக்கிறது உக்ரேன் நாட்டிலும் கிரிமியாவிலும்? (2ஆம் பாகம்)

உலகப் பார்வை: என்ன நடக்கிறது உக்ரேன் நாட்டிலும் கிரிமியாவிலும்? (2ஆம் பாகம்)

746
0
SHARE
Ad

மார்ச் 28 – Crimea-Ukraine map 440 x 215கிரிமியா என்பது உக்ரேன் நாட்டின் ஒரு பகுதி. ஆனால், நாட்டின் தென்முனையில் உக்ரேனுடன் நிலப்பகுதியின் வழியாக ஒட்டிக் கொண்டிக் கொண்டிருக்கும் ஒரு தீபகற்பம்.

#TamilSchoolmychoice

உதாரணமாக நமது மலேசியாவின் தென்முனையில் இருக்கும் சிங்கப்பூர், ஜோகூர் நிலப்பகுதியுடன் ஒட்டிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அதுதான் கிரிமியா!

கிரிமியாவை அடுத்து உள்ள கடல் பகுதிதான் ரஷியாவையும் கிரிமியாவையும் பிரிக்கின்றது. உலக வரைபடத்தை ஒரு முறை எடுத்துப் பார்த்தால் அதன் பூகோள அமைப்பும், அது எங்கே இருக்கின்றது என்பதும் உங்களுக்கு மேலும் தெளிவாகப் புரியும்.

கடந்த கால ரஷிய ஆதிக்கத்தின் பிரதிபலனாக கிரிமியா நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ரஷியர்களாகவும், அவர்களின் மொழி ரஷிய மொழியாகவும் இருந்து வந்தது. ஆனால், கிரிமியா உக்ரேன் நாட்டின் ஒரு பகுதி. உக்ரேன் மக்களும் இதனை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல் வாழ்ந்து வந்தனர்.

உக்ரேன் நாட்டில் கடந்த சில மாதங்களாக நிகழ்ந்த – நாம் இந்தக் கட்டுரையின் முதல் பாகத்தில்  குறிப்பிட்ட அரசியல் மாற்றங்கள், ரஷிய அரசாங்கத்தின் அதிபர் புடினை விழித்துக் கொள்ளச் செய்தன. உக்ரேன் ரஷியாவுடன் நெருக்கம் பாராட்டாமல், ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி பொருளாதார, அரசியல் ரீதியாக நகர்வதைக் கொண்டு விளாடிமிர் புடின் ஆத்திரம் கொண்டார்.

Yanukovich Ukranine 300 x 200ரஷிய ஆதரவு அதிபரான யானுகோவிச் (படம்) உக்ரேனில் இருந்து வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்ததும், மிகவும் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்த புடின் உக்ரேன் மீது ஏதாவது ஒரு வகையில் பழி தீர்த்துக் கொள்ள நினைத்த போது அவரது கண்ணின் பட்டதுதான் கிரிமியா.

கிரிமியாவை ரஷியாவுடன் இணைக்க முயற்சிகள்

ரஷியாவுக்கு மிக அடுத்துள்ள பிரதேசம்,60 சதவீதத்திற்கும் மேற்பட்ட ரஷிய மக்கள் வசிக்கும் பிரதேசம் என்பது தவிர்த்து பெரும்பான்மையான கிரிமிய மக்கள் தங்களை ரஷிய வம்சாவளியினராகவே கருதினர். ரஷியாவுடன் இணைந்திருக்கவே விரும்பினர் என்பதுதான்  உண்மை.

இது போன்ற சாதக அம்சங்களைக் கருத்தில் கொண்டு உடனடியாக, அதுவும் அதிரடியாகக் களத்தில் இறங்கினார் புடின். கிரிமியா மக்களுக்காக பொது வாக்கெடுப்பு ஒன்றை உடனடியாக கிரிமியா நாடாளுமன்றம் குறுகிய கால அவகாசத்தில் அறிவித்தது.

பொது வாக்கெடுப்புக்கு ஒரு நாள் முன்னதாக, உக்ரேன் நாட்டிலிருந்து பிரிவதற்கு ஒப்புதல் அளிப்பதாக கிரிமியா நாடாளுமன்றம் வாக்களித்தது.

usa-security-snowden-putinபொது வாக்கெடுப்புக்கான அறிவிப்பை வெளியிட்டதும், புடின் ரஷியத் துருப்புகளை கிரிமியாவுக்குள் வலுக்கட்டாயமாக நுழைத்தார். கிரிமியாவின் முக்கிய மையங்களில் ரஷியத் துருப்புக்கள் ஆயுதங்களுடன் காணப்பட்டதை அனைத்துல தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.

இந்த அச்சுறுத்தல்,  நெருக்குதல் எல்லாம் மக்களை பயமுறுத்தி அவர்கள் கிரிமியா ரஷியாவுடன் இணைவதற்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என அனைத்துலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன என்றாலும், புடின் மசிவதாக இல்லை. அடுத்தடுத்து அதிரடியாக காய்களை நகர்த்தத் தொடங்கினார்.

இதனையெல்லாம் சற்றும் எதிர்பார்க்காத அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் உண்மையில் புடினின் அரசியல் சாதுரியத்தால் ஏமாந்து விட்டனர் என்றுதான் கூற வேண்டும்.

என்ன செய்வது என்பது தெரியாமல் மேற்கத்திய நாடுகளும், உக்ரேனும் விழித்துக் கொண்டிருக்க, கடந்த மார்ச் 16ஆம் தேதி கிரிமியாவில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு 97 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் ரஷியாவுடன் இணைவதற்கு ஆதரவு தெரிவித்தனர் என்று அறிவிக்கப்பட்டது.

1954ஆம் ஆண்டு முதல் உக்ரேனுடன் ஒரு பகுதியாக விளங்கி வந்த கிரிமியா ரஷியாவுடன் இணைவது மக்களால் செய்யப்பட்ட முடிவுதான் என்பதுதான் இதில் உள்ள ஒரே பிரச்சனை.

சட்டப்படி சரியா?

ஆனால், உக்ரேனின் சட்டப்படி, ஒரு பிரதேசம் பிரிவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம். ஆனால் அத்தகைய வாக்கெடுப்பு ஒட்டு மொத்த நாட்டு மக்களிடையேயும் நடத்தப்பட வேண்டும். மொத்த நாடும் ஒரு பிரதேசம் பிரிவதற்கு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ வாக்களிக்க வேண்டும்.

ஆனால், இங்கு நடந்தது என்னவென்றால், கிரிமியா பிரதேசத்தின் மக்கள் மட்டும்தான் பொது வாக்கெடுப்பில் கலந்து கொண்டார்கள்.

பொது வாக்கெடுப்புக்கு முன்னதாக ரஷியா நடத்திய அத்துமீறல்கள், இராணுவத் துருப்புகளின் குவிப்பு, மக்களுக்கு விடுக்கப்பட்ட மறைமுக மிரட்டல்கள் – போன்ற அம்சங்கள்தான் அனைத்துலக சமுதாயத்திற்கு நெருடல்களாக இருந்தன. இது சுதந்திரமான பொது வாக்கெடுப்புதானா என்ற சந்தேகத்தையும் கிளப்பின.

ஆனால், பொதுவாக்கெடுப்பு முடிந்த உடனேயே கிரிமியா ரஷியாவுடன் இணைய விண்ணப்பிக்க, ரஷிய நாடாளுமன்றமும் உடனடியாக அதனை ஏற்றுக் கொண்டது. கண்மூடிக் கண் திறப்பதற்குள் கிரிமியா ரஷியா நாட்டின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

கிரிமியாவில் இருந்த உக்ரேனின் இராணுவத் தளங்கள் ரஷியத் துருப்புகளால் கைப்பற்றப்பட்டன. உக்ரேனின் இராணுவத்தினர் கிரிமியாவிலிருந்து வெளியேறி விட்டாலும், பலர் ரஷியத் துருப்புகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன.

UN SECRETARY GENERAL MEETS WITH SPANISH PRESIDENTநிலைமையைச் சமாளிக்கவும், சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்தவும் ஐக்கிய நாட்டு சபை (ஐ.நா) அதிகாரிகளும், ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கீ மூனும் (படம்)  மாஸ்கோவுக்கும், உக்ரேனுக்கும் விரைந்தனர். ஆனால், கிரிமியா ரஷியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட முடிவு என்பது மட்டும் முடிவடைந்த கதையாகிவிட்டது.

அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கிரிமிய இணைப்பைத் தாங்கள் அங்கீகரிக்கவில்லை என்று அறிவத்ததோடு, பொருளாதாரத் தடைகளையும் தற்போது கட்டம் கட்டமாக அறிவித்து வருகின்றனர்.

அதோடு, பொருளாதார ரீதியாக கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்துள்ள உக்ரேன் நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும், உலக வங்கியும், அனைத்துலக நிதி வாரியமும் பில்லியன் கணக்கான டாலர்களை வாரி வழங்க முன்வந்துள்ளன.

அப்போதுதானே, உக்ரேன் ரஷியா பக்கம் சாயாமல் தடுத்து வைக்க முடியும்!

பொருளாதாரத் தடைகள் பலனைத் தருமா?

அறிவிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் சிறிய அளவில்தான் இருக்கின்றன என்பது ஒருபுறமிருக்க இந்த நவீன யுகத்தில் இத்தகைய பொருளாதாரத் தடைகள் ரஷியா போன்றதொரு பெரிய, இராணுவ வலிமை கொண்ட ஒரு நாட்டுக்கு பாதிப்புகளைக்  கொண்டுவருமா என்பதுதான் பொருளாதார நிபுணர்கள் எழுப்பியுள்ள கேள்விக் குறி.

காரணம், ரஷியாவிலிருந்து ஏராளமான பொருட்கள் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்குச் செல்கின்றன. குறிப்பாக எண்ணெய் வளங்கள் நிறைய அளவில் ரஷியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது நிறுத்தப்பட்டால், பாதிப்பு ஐரோப்பிய நாடுகளுக்குத்தானே தவிர, ரஷியாவுக்கல்ல.

அதோடு, சீனா, இந்தியா போன்ற பெரிய நாடுகள் இந்த விவகாரத்தில் ரஷியாவுடன் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவர்களும் பொருளாதாரத் தடைகளை ஆதரிக்கவில்லை.

குறிப்பாக, ஐ.நா.வின் பாதுகாப்பு மன்றத்தில் கிரிமியா இணைப்புக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, ரஷியா தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த தீர்மானத்தை முறியடிக்க, ரத்து அதிகாரத்தைக் கொண்டிருந்த மற்றொரு நாடான சீனாவோ நடுநிலை வகித்தது.

ஜப்பான் மட்டுமே அமெரிக்காவுடன் இணைந்து கொண்டுள்ளது. ரஷியாவுடன் பழைய அரசியல், எல்லைப் பிரச்சனை பகைமையைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்று ஜப்பான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதிலடியாக ரஷியாவும், அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் எதிராக  சில பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.

கிரிமியாவின் வித்தியாசமான நிலைமை

Crimea celebrations 440 x 215

(ரஷியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டதற்கு கிரிமிய மக்களின் கோலாகலக் கொண்டாட்டம்)

கிரிமியா விவகாரத்தின் மிக முக்கிய அம்சம், ரஷியாவுடன் இணைப்பு என்பது பொது வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது என்பதுதான்.

கிரிமிய நாட்டு மக்களில் பெரும்பான்மையோர் ரஷியர்கள் என்பதும் உண்மையிலேயே அவர்கள் மொழியாலும், கலாச்சாரத்தாலும், பூகோள ரீதியாகவும் ரஷியாவுடன் இணைந்திருப்பதையே விரும்புகின்றார்கள் என்பதும்கூட மற்றொரு முக்கிய அம்சம்.

இந்நிலையில் நாளடைவில் அனைத்துல சமுதாயம் இந்த விவகாரத்தை மறந்து விட்டு வழக்கமான சகஜ நிலைமைக்குத் திரும்பி விடும் என்பதுதான் சரித்திர ஆய்வாளர்களின் அனுமானமாகும் – எதிர்பார்ப்பாகும்.

திபெத், இலங்கை போன்ற நாடுகளில் பிரச்சனைக்குரிய பிரதேசங்களில் அங்குள்ள மக்களின் மனோநிலை,  தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களின் மீது எதிர்ப்புணர்வைக் காட்டுவதாக இருக்கின்றது. ஆனால் கிரிமியாவிலோ, அந்தப் பிரதேச மக்கள் ரஷியாவுடன் இணைவதை விரும்பியிருக்கின்றனர்.

இதுதான் கிரிமியா விவகாரத்திலுள்ள வித்தியாசமான சிக்கலாகும்.

இதனால், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. ரஷியாவின் துணிச்சலான, தன்மூப்பான, ஒரு சார்பு நிலையிலான கடுமையான நடவடிக்கைகள் அவர்களை நிலை தடுமாறச் செய்துள்ளன.

தங்களின் அனைத்துலக அரசியல் வியூகங்களை மறு ஆய்வு செய்ய வேண்டிய – அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு அவர்கள் தற்போது உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், தொடரும் பொருளாதாரத் தடைகள் என்னென்ன பாதிப்புகளை ரஷியாவுக்கும், அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்படுத்தும் – அதனால் கிரிமியா விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா – அல்லது இது முடிந்து போன கதையா – என்பதெல்லாம் காலம் நமக்கு விடை சொல்லக் கூடிய கேள்விகள்.

1914-2014 ஒப்பீடு

World war 1 300 x 200இறுதியாக, ஐரோப்பாவில் நடந்து வரும் மாற்றங்களைக் கண்காணித்து வரும் சரித்திர ஆய்வாளர்கள் தற்போது நடக்கும் சம்பவங்கள் 1914ஆம் ஆண்டை ஒத்திருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னால், 1914இல் நடந்த இது போன்ற சில சம்பவங்கள்தான் முதலாம் உலகப் போருக்கு வழிகோலியது என்பது சரித்திர ஆய்வாளர்களின் முடிவு.

இப்போது, வேறு வேறு நாடுகள், வேறு மாதிரியான நிகழ்வுகள் என்றாலும், அந்த சம்பவங்கள் 1914ஆம் ஆண்டை நினைவு படுத்தும் விதத்தில் ஒத்திருக்கின்றன என்பதுதான் சரித்திர ஆய்வாளர்கள் ஆச்சரியப்படும் ஒப்பீடு.

ஆனால், அப்படியே ஒரு போர் வந்தாலும், அது பொருளாதாரப் போராகத்தான் இருக்குமே தவிர, ஆயுதப் போராக இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.

இறுதியாக இன்னொரு கொசுறுத் தகவல்!

அமெரிக்காவும் ரஷியாவும் பொருளாதாரத் தடை என ஒரு புறம் முட்டல் மோதலில் ஈடுபட்டிருக்க, இன்னொரு முனையில் சில நாட்களுக்கு முன்னால், அந்த இரண்டு நாடுகளும் வான்வெளி ஆராய்ச்சிக்காக, தங்களின் நாட்டு விஞ்ஞானிகள் சிலரை ஒன்றிணைந்து, வான்கலத்தின் வழியாக வான்வெளிக்கு அனுப்பியுள்ளார்கள்.

அனைத்துலக அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!

-இரா.முத்தரசன்

இந்தக் கட்டுரையின் முதல் பாகம் :

உலகப் பார்வை: என்ன நடக்கிறது உக்ரேன் நாட்டிலும் கிரிமியாவிலும்? (முதல் பாகம்)