Home உலகம் உலகப் பார்வை: என்ன நடக்கிறது உக்ரேன் நாட்டிலும் கிரிமியாவிலும்? (முதல் பாகம்)

உலகப் பார்வை: என்ன நடக்கிறது உக்ரேன் நாட்டிலும் கிரிமியாவிலும்? (முதல் பாகம்)

742
0
SHARE
Ad

Crimea-Ukraine map 440 x 215மார்ச் 27 – காணாமல் போன மாஸ் விமானத்தைத் தேடும் பணிகளைப் பற்றிய செய்திகளிலேயே நாம் அனைவரும் மூழ்கியிருக்க, ரஷியா-உக்ரேன்-கிரிமியா பிரதேசங்களில் உலக வரலாற்றை மாற்றும் விதமாகவும், உலக வரை படங்களில் சில பூகோள  ரீதியான திருத்தங்கள் செய்யும் வண்ணமும் சில முக்கிய அரசியல் நிலவரங்கள் அரங்கேறியுள்ளன.

மேலே உள்ள வரைபடத்தில் கறுப்பு வட்டமிடப்பட்டுள்ள பிரதேசம்தான் இன்றைக்கு சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் கிரிமியா பிரதேசம்.

இன்றைய இந்த அரசியல் நிலவரத்தின் நிலைமையைப் பற்றி நாம் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு முன்னால் நாம் கொஞ்சம் பின்னோக்கி சரித்திரத்தைப் புரட்டிப் பார்க்க வேண்டும். 

#TamilSchoolmychoice

அப்போதுதான் நமக்கு உக்ரேன்-கிரிமியா பிரதேசங்களின் தற்கால அரசியல் சூழ்நிலைகள் விளங்கும்.

முதலில் உக்ரேன் என்ற நாடு எப்போது, எப்படி உதயமானது என்பதைப் பார்க்க வேண்டும்!

உக்ரேன் புதிய நாடு உதயம்

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால் ரஷியா தன்னைச் சுற்றியிருந்த நாடுகளையும் பிரதேசங்களையும் தனது இராணுவ பலத்தின் துணையோடும், கம்யூனிச நாடு என்ற அதிகாரத்தோடும் இணைத்துக் கொண்டது.

இவை எல்லாம் தனித்தனி நாடுகள் என்றாலும், தனித் தனி மொழிகள், கலாச்சாரங்களையும் கொண்டவை என்றாலும் அவை அனைத்தும் சோவியத் ரஷியாவின் அங்கமாகவே – அதன் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட்டன.

சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னால் உக்ரேன், கசக்ஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் என்றெல்லாம் தனித்தனி பெயர்களுடன் நாடுகள் இருந்ததில்லை. அனைத்தும் சோவியத் ரஷியா என்ற மாபெரும் நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டன.

1990ஆம் ஆண்டுகளில் ரஷியாவின் அதிபராகப் பொறுப்பேற்ற மிக்கேல் கொர்பசேவ் அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் ஆகியோரின் சமாதானப் பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையிலான கோல்ட் வார் (cold war) என்று அழைக்கப்பட்ட மறைமுகப் பனிப்போர் ஒரு முடிவுக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என இரண்டு நாடுகளாக இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிரிந்து கிடந்த இரண்டு ஜெர்மனிகளும் ஒன்றிணைந்தன. அந்த நாடுகளைப் பிரித்து வைத்திருந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற பெர்லின் தடுப்புச் சுவர் உடைத்தெறியப்பட்டது.

இதுதான் சமயம் என்று ரஷியாவின் பிடியிலிருந்தும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக விடுதலை பெற்றன. பத்துக்கும் மேற்பட்ட புதிய நாடுகள் உதயமாகின. உலக வரைபடங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. ஐக்கிய நாட்டு சபையில் நாடுகளின் உறுப்பினர் எண்ணிக்கையும் உயர்ந்தது.

அவ்வாறு 16 ஜூலை 1990ஆம் தேதி, ரஷியாவின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தனி சுதந்திர நாடாக உதயமானதுதான் உக்ரேன்.

புடின் வருகையால் அரசியல் மாற்றம்

Vladimir Putin 440 x 215இருப்பினும் விளாடிமிர் புடின் (படம்) ரஷிய அதிபராக வந்த பின்னர் மீண்டும் மெல்ல மெல்ல ரஷியாவின் ஆதிக்கத்தை அண்டை நாடுகளின் மீது செலுத்த ஆரம்பித்தார்.

அதன்படி இயற்கை வளங்கள் நிறையக் கொண்டிருந்த, விவசாயத் துறையில் சிறந்த உற்பத்திகளைக் கொண்டிருந்த பெரிய நாடான உக்ரேனையும் ரஷியாவின் பொருளாதாரப் பிடிக்குள் வைத்திருக்க புடின் விரும்பினார்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலேயே மிகப் பெரிய நிலப் பிரதேசத்தைக் கொண்டிருக்கும் நாடு உக்ரேன் என்பது குறிப்பிடத்தக்கது.

புடினுக்குப் பொருத்தமாக, ரஷியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேண விரும்பிய விக்டர் யானுகோவிச் – Victor Yanukovych – (படம்) 2010ஆம் ஆண்டில் உக்ரேனின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், அதற்கு முன்பிருந்தே உக்ரேன் அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான பொருளாதார உறவுகளைக் கொண்டிருந்தது. விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் அதிகாரபூர்வமாக இணைவதற்கு பொதுமக்களிடையே வாக்கெடுப்பு நடத்துவதற்கும் உக்ரேன் தயாராகி வந்தது. Yanukovich Ukranine 300 x 200

இந்த சூழ்நிலையில்தான் உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை விரும்பாத ரஷிய அதிபர் புடின், ரஷிய சார்பு உக்ரேன் அதிபரான யானுகோவிச் (படம்) மூலம் காய்களை நகர்த்த ஆரம்பித்தார்.

முதல் கட்டமாக கடந்த நவம்பர் 2013இல் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பொருளாதார உடன்பாட்டையும், சுதந்திர வர்த்தக நடவடிக்கைகளையும் யானுகோவிச் முறித்துக் கொண்டார்.

ஆனால் இதனை உக்ரேன் மக்கள் விரும்பவில்லை. நீண்ட காலமாக ரஷியாவின் ஆதிக்கத்தில் இருந்த காரணத்தால் ஏழ்மையை மட்டுமே கண்டிருந்த உக்ரேன் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதையே விரும்பினர். அதன் மூலம்தான் தங்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்றும் நம்பினர்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பொருளாதார உடன்பாட்டை உக்ரேன் முறித்துக் கொண்டதைத் தொடர்ந்து ரஷியா உக்ரேனுக்கு 15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதார உதவிகளை வழங்க முன்வந்தது.

அதோடு, உக்ரேனில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருந்த மக்கள் போராட்டங்களை ஒடுக்கவும் – ஒழிக்கவும் ரஷியா நெருக்குதல் கொடுக்கத் தொடங்கியிருந்தது.

கடுமையான சட்டங்களால் வெடித்த மக்கள் ஆர்ப்பாட்டங்கள்

Ukraine protests Jan 14 - 440 x 215இந்த ஆண்டு ஜனவரியில், மக்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராகக் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்ட சட்டங்களை நாடாளுமன்றத்தில் யானுகோவிச் அரசாங்கம் அங்கீகரித்தது. எதிர்க்கட்சிகள் இதனை சர்வாதிகாரத்தனமான, கொடுங்கோல் ஆட்சியின் சட்டங்கள் என வர்ணித்தன.

மக்களிடையே உறங்கிக் கிடந்த போராட்டக் கனலை எதிர்க்கட்சிகளும் ஊதிவிட, பிப்ரவரி 18ஆம் தேதி முதல் வீதி ஆர்ப்பாட்டங்களாக மக்கள் போராட்டங்கள் உக்ரேன் நாடு எங்கிலும் வெடித்தன.

உக்ரேனின் தலைநகரான கீவ் (Kiev) நகரில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் இறங்க, அதனை அடக்க யானுகோவிச் அரசாங்க சார்பு துருப்புகள் முயல, கலவரங்கள் வெடித்து சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

பல ஆர்ப்பாட்டக்காரர்களை துருப்புகள் தலையில் குறிவைத்து சுட்டுக் கொன்றதாக புகார்கள் எழுந்தன. ஆனால் ரஷியாவோ, இந்த ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சிகள் என சாடியது.

பிப்ரவரி 21ஆம் தேதி ஆர்ப்பாட்டக்காரர்களுடனும், எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் சமாதான உடன்படிக்கை காண முன்வந்தார் யானுகோவிச்.

ஆனால், அதற்கு ஒப்புக் கொள்ளாத ஆர்ப்பாட்டக்காரர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அரசாங்கக் கட்டிடங்களையும் முற்றுகையிடத் தொடங்கினர்.

மக்களின் நியாயமான போராட்டத்தின் வீரியத்தையும், அதில் பொதிந்திருந்த நேர்மையையும் உணர்ந்து கொண்ட அரசாங்கத் துருப்புகளும் மெல்ல மெல்ல பின்வாங்கத் தொடங்கின. அதனால் ஆர்ப்பாட்டக்காரர்களின் ஆதிக்கமும் மேலோங்கத் தொடங்கியது.

எதிர்க்கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் யானுகோவிச்சுக்கு எதிராக களத்தில் தீவிரமாக இறங்க, இந்த ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி யானுகோவிச்சை அதிபர் பதவியிலிருந்து உக்ரேன் நாடாளுமன்றம் அகற்றியது.

அதனைத் தொடர்ந்து யானுகோவிச் தன் உயிருக்கு ஆபத்து என அறிவித்து விட்டு குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வெளியேறி ரஷிய அதிபர் புடினின் ஆதரவோடு ரஷியாவில் அரசியல் தஞ்சமடைந்துவிட்டார்.

புதிய அதிபர் யார்?

2010ஆம் ஆண்டில் யானுகோவிச் மோசடிகள் செய்துதான் அதிபர் தேர்தலில் வென்றார் என்ற குற்றச்சாட்டுகள் ஒருபுறம் எப்போதுமே எழுந்த வண்ணமே இருந்தன.

யானுகோவிச் 2010இல் அதிபர் தேர்தலில் வென்றதும் யூலியா டைமோசெங்கோ (Yulia Tymoshenko)   என்ற எதிர்க்கட்சி தலைவரை சிறையில் தள்ளினார்.

ஆனால் யானுகோவிச்சை அதிபர் பதவியிலிருந்து அகற்றிய உக்ரேனிய நாடாளுமன்றம், சிறை வைக்கப்பட்டிருந்த யூலியாவை விடுதலை செய்ததோடு, அதிபர் தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடலாம் என்ற அங்கீகாரத்தையும் வழங்கியது.

புதிய அதிபருக்கான தேர்தலில் வெற்றி பெறக் கூடிய மற்றொரு வேட்பாளராக விட்டாலி கிளிட்ச்கோ (Vitali Klitschko) என்ற முன்னாள் குத்துச் சண்டை வீரர் கருதப்படுகின்றார்.

புதிய அதிபருக்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 25ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேன் நாடு ஐரோப்பிய பொருளாதார ஒன்றியத்தில் இணைவதற்கான பொது வாக்கெடுப்பும் விரைவில் நடைபெற உள்ளது.

கிரிமியா விவகாரம்

இந்த சூழ்நிலையில்தான் கிரிமியா விவகாரம் விஸ்வரூபமாக உருவெடுத்தது.

கிரிமியா பிரதேசம் எங்குள்ளது? அதன் பின்னணி என்ன?

கிரிமியா ஏன் ஒரு பிரச்சனையாக வெடித்தது?

இவற்றையெல்லாம், இந்தக் கட்டுரையின் இரண்டாவது பாகத்தில் விரிவாகப் பார்ப்போம்!

-இரா.முத்தரசன்

(பின்குறிப்பு: இந்தக் கட்டுரையின் இரண்டாம் பாகம்:

உலகப் பார்வை: என்ன நடக்கிறது உக்ரேன் நாட்டிலும் கிரிமியாவிலும்? (2ஆம் பாகம்)