சென்னை, மார்ச் 27 – என்னை கட்சியில் இருந்து நீக்கியது, கருணாநிதியால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. ஏதோ காரணத்தை காட்டி, அவரை மிரட்டி நிர்பந்தித்து, எடுக்கப்பட்ட முடிவு’ என, அழகிரி தெரிவித்தார். தி.மு.க கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தென் மண்டல அமைப்பு செயலாளர் அழகிரி, ஆதரவாளர்கள் கூட்டங்கள் நடத்தி, கட்சிக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகிறார்.
இந்நிலையில், ‘தினமலர்’ நாளிதழுக்கு மார்ச் 24ல், அவர் அளித்த சிறப்பு பேட்டியில், ‘தி.மு.க., சொத்துக்களை அபகரிக்க ஸ்டாலின் திட்டமிடுகிறார்’ என பரபரப்பு குற்றம் சாட்டினார். இதையடுத்து, அழகிரியை கட்சியில் இருந்து, அறவே நீக்கம் செய்யப்படுவதாக, மார்ச் 25ல், கருணாநிதி அறிவித்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், அவர் கூறியதாவது, இந்த நீக்கம், கருணாநிதியால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. ஏதோ காரணத்தை காட்டி, அவரை மிரட்டி எடுக்கப்பட்ட முடிவு. அவரை மிரட்டி, நிர்பந்திக்கிறார்கள்.
அவர் யார் என்று தெரியும். அவரும், அவருக்கு நெருங்கிய நண்பரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். அந்த உண்மை விரைவில் வெளிவரும். போக போக உண்மை புரியும். கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியதாகவும், அதற்கு பதில் அளிக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.
கட்சியில் இருந்து இதுவரை என் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ எந்த நோட்டீசும் வரவில்லை. வந்திருந்தால் நான் அதில் கையெழுத்து போட்டிருப்பேனே. அதை காட்டச் சொல்லுங்கள் என அழகிரி தெரிவித்தார்.