கோலாலம்பூர், மார்ச் 18 – மாயமான MH370 விமானம் குறித்து தினம் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.
முதலில் விபத்திற்குள்ளாகி இருக்கலாம் என்று தேடப்பட்ட விமானம், பின்னர் கடத்தப்பட்டதாக தீவிர விசாரணையின் மூலம் முடிவு செய்யப்பட்டது.
அதன் காரணம் விமானிகள் உட்பட அவ்விமானத்தில் பயணம் செய்த அனைவரின் பின்னணியும் ஆராயப்பட்டன.
தலைமை விமானி ஸஹாரி அகமட் ஷா (படம்) தனது வீட்டில் விமானி அறையின் மாதிரி வடிவத்தை வைத்திருந்ததால், அவர் மீது விசாரணை அதிகாரிகளின் கவனம் திரும்பியது.
கடந்த வாரம் நஜிப் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என அறிவித்தவுடன், ஸகாரியின் வீட்டை சோதனையிட்ட காவல்துறையினர், விமானிகள் அறையின் மாதிரி வடிவத்தை கைப்பற்றினர்.
இந்நிலையில், விமானம் மாயமாயவதற்கு முதல் நாள் விமானி ஸகாரியின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வழக்கமாக லாமான் ஸ்ரீயில் உள்ள தனது குடியிருப்பில் நுழையும் ஸகாரி, அங்கு வாயிலில் பாதுகாப்பில் இருக்கும் நேபாள நாட்டு பாதுகாவலர்களுக்கு இஸ்லாமிய முறைப்படி ‘சலாம்’ சொல்லுவாராம்.
ஆனால் சனிக்கிழமை அதிகாலை விமானம் கிளம்புவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னால், தனது வீட்டில் இருந்து கிளம்பிய ஸகாரி, பாதுகாவலர்களுக்கு இராணுவ வீரர்கள் செய்வது போல் வணக்கம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
“அன்று அவரிடம் வழக்கத்திற்கு மாறாக மாற்றம் தெரிந்தது. குறிப்பாக இரவு அவர் வணக்கம் சொன்ன முறை” என்று பாதுகாவலர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், விமான நிலையத்திற்கு செல்வதற்கு விமான நிலையத்தின் வாகனத்தை பயன்படுத்தும் அவர், அன்று இரவு தனது பிஎம்டபிள்யூ 5 (BMW 5) ரக காரில் சென்றுள்ளார். அவர் சென்று 20 நிமிடங்களுக்குப் பிறகு விமான நிலையத்தின் வாகனம் அவரை அழைத்துச் செல்ல வந்துள்ளது.
இதில் குறிப்பிடும் படியான விஷயம் என்னவென்றால், 9 மணியளவில் வீட்டில் இருந்து தனது பிஎம்டபிள்யூ காரில் கிளம்பிய ஸகாரியுடன் அவரது மனைவியும் சென்றுள்ளார். ஆனால் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பவேயில்லை.
சரியாக ஒரு வாரம் கழித்து, விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று நஜிப் கடந்த சனிக்கிழமை அறிவித்த அன்று, காலை 10 மணியளவில் தான் மீண்டும் லாமான் ஸ்ரீ இல்லத்திற்கு ஸகாரியின் மனைவி திரும்பியுள்ளார் என்று கூறப்படுகின்றது.
விமானி தற்கொலை என்ற கோணத்தில் விசாரணை
இதனிடையே, விமானம் மாயமானதற்கு விமானியின் தற்கொலை முயற்சி எதுவும் காரணமாக இருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.
இதன் காரணமாக, தலைமை விமானி ஸகாரி, துணை விமானி பாரிக் மற்றும் விமானப் பணியாளர்கள், பயணிகள் ஆகியோரது கடைசி சில மணி நேர நடவடிக்கைகள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.
இது குறித்து இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “விமானத்தை செலுத்திய விமானிகளில் யாராவது தற்கொலை எண்ணத்துடன் இருந்திருக்கிறார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
எனினும், 12 விமானப் பணியாளர்களில் யாராவது தனிப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தனரா? என்ற கேள்விக்கு ஹிஷாமுடின் பதிலளிக்க மறுத்துவிட்டார்.