சிரியா, மார்ச் 20 – சிரியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டதால், கடந்த 10-ஆம் தேதி சிரியா, அமெரிக்காவுக்கான தங்களது தூதரக நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுவதாக அறிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக அமெரிக்கா தங்களது நாட்டில் செயல்பட்டு வரும் சிரியாவின் தூதரகங்களை மூடுமாறு அறிவித்துள்ளது.
அங்கு பணியாற்றிவரும் அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களைத் தவிர மற்ற ஊழியர்கள் இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு அரசு குறிப்பிட்டுள்ளது. அதேபோல் தூதரக செயல்பாடுகளும் வரும் ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதியுடன் நிறுத்திக்கொள்ளப்போவதாக அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது.
சிரியா மக்களுக்கு நிகழும் கொடுமைகளுக்குக் காரணம் தற்போதைய அரசுதான், அவர்களால் நியமிக்கப்பட்ட நபர்கள் தூதரக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அமெரிக்க அரசால் ஏற்க இயலாது என்று, சிரியாவிற்கான அமெரிக்கச் சிறப்புத் தூதர் டேனியல் ரூபின்ஸ்டென் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.