புதுடெல்லி, மார்ச் 20 – தமிழக காங்கிரஸ் கட்சியில் 40 வயதுக்கு குறைவானவர்கள் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் மாநில தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் மாநில தலைவர் ஞானதேசிகன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
காங்கிரஸ் கட்சி அகில இந்திய கட்சியாகும். பல்வேறு மாநிலங்களின் வேட்பாளர்கள் பட்டியலை மத்திய குழு தீர விசாரித்து முடிவெடுத்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஏற்கனவே ஒரு கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள், மூத்த தலைவர்கள் தவிர 40 வயதுக்கு குறைந்தவர்களை இந்த முறை வேட்பாளர்களாக சேர்க்க வேண்டும் என்று இந்தக்குழு விரும்பியதன் காரணமாக அந்த பட்டியலில் அடிப்படையாக சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது.
அந்த மாறுதல்களை அக்குழுவில் உள்ள குலாம்நபி ஆசாத் மற்றும் செயலாளர் சர்க்கார் ஆகியோர் மீண்டும் ஒருமுறை அமர்ந்து ஆலோசித்தோம். அந்த பட்டியலில் 40 வயதுக்கு உட்பட்டவர்களும், மற்றவர்களும் இருப்பார்கள். பட்டியல் இப்போது முழுவடிவம் பெற்றுவிட்டது.
எங்கள் தலைவர் சோனியாகாந்தியிடம் இந்த பட்டியலில் கையெழுத்து பெறவேண்டும். இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் இளைஞர்களிடம் கட்சி வந்தால் கட்சியை வளர்க்க வசதியாக இருக்கும் என்றும் கட்சித்தலைமையில் நினைக்கிறார்கள்.
தேர்தலில் போட்டியிடுவதும் இடாததும் அந்தத் தலைவர்களின் முடிவு. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை தலைவர்கள் போட்டியிடுவது ஒருபுறம் இருக்க, மாநில அளவில் தேர்தல் பணிக்கு தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்தலில் யார் போட்டியிட வேண்டும், வேண்டாம் என்பது கட்சியின் முடிவு. தலைவர்களின் முடிவு என மாநில தலைவர் ஞானதேசிகன் கூறினார்.